2025 மே 21, புதன்கிழமை

’அனர்த்தப்பாதுகாப்புக்கு ஒழுங்குபடுத்தப்பட்ட வேலைத்திட்டம் அவசியம்’

கே.எல்.ரி.யுதாஜித்   / 2017 நவம்பர் 01 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

'அனர்த்தப்பாதுகாப்புச் செயற்பாட்டுக்கு சரியானதொரு ஒழுங்குபடுத்தப்பட்ட வேலைத்திட்டம் அவசியமாகும். இச் செயற்பாட்டில் சம்பந்தப்படுகின்ற ஒவ்வொரு தரப்பினரும், முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவது இதில் முதன்மை பெறுகிறது' என்று, மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுக் கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில்,  செவ்வாய்க்கிழமை (31) பகல்  நடைபெற்றது.

இந்தக்  கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் கூறிய அவர்,  

'சுனாமி சுமாத்திராவில் ஏற்படுவதே வழமையாக இருந்தது. ஆனால், தற்போதைய ஆய்வுகளின்படி 'மாக்ரா' எனப்படும் அரபுக்கடல் பிரதேசத்தில் உருவாவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

'78ஆம் ஆண்டுக்குப்பிறகு  சூறாவளி அனர்த்தம் ஏற்படவில்லை. அதன் மீள்வருகைக்காலம், 30 வருடங்களாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இவ்வருடத்திலும் எதிர்பார்ப்புகள் உள்ளன. காலநிலை மாற்றத்தால் சுனாமி, சூறாவளிதான் ஏற்படவேண்டும் என்றில்லை.

'வேறு வகையான அனர்த்தங்களும் உருவாகலாம். ஆகையினால்தான் அரசாங்கம் இவ்வாறான சுனாமி ஒத்திகையை நடத்துவதற்கு உத்தேசித்துள்ளது. சுனாமி எச்சரிக்கையானது இந்தியாவிலுள்ள ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வானிலை அவதான நிலையத்துக்கு பரிமாறப்பட்டு, அனர்த்த முகாமைத்துவ நிலையம், அமைச்சு போன்றவற்றில் ஆராயப்பட்டு மாவட்டத்தின் பிரதேச, கிராம சேவைகள் பிரிவுகளுக்கூடாக நடைமுறைப்படுத்தப்படும்.

'அனர்த்தங்களிலிருந்து மக்களையும் அவர்களது உடமைகளையும் பாதுகாக்கவேண்டும் என்ற வகையில் சரியான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். அந்தவகையிலே தேசிய அளவில் இந்த முன்னெச்சரிக்கைச் செயற்பாடு மேற்கொள்ளப்படுகிறது.  

'அனர்த்தப்பாதுகாப்புச் செயற்பாட்டுக்கு சரியானதொரு ஒழுங்குபடுத்தப்பட்ட வேலைத்திட்டம் அவசியமாகும். இச்செயற்பாட்டில் சம்பந்தப்படுகின்ற ஒவ்வொரு தரப்பினரும் முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவது இதில் முதன்மை பெறுகிறது. திணைக்களங்கள் இதற்கான செயற்பாட்டுக்கு தயாராக இருக்கின்றனவா என்பதும் இதன்மூலம் அவதானிக்கப்படும்.

'இவ்வருடத்தில் மின்னலின் தாக்கம் அதிகளவில் காணாப்படும். இதற்கான விழிப்புணர்வுகள் கிராம ரீதியாக மேற்கொள்ளப்படவேண்டும். கடந்த இரண்டு வாரங்களில் நாடு பூராகவும் மின்னல்தாக்கம் தொடர்பான அதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளன.  

'அந்தவகையில் முன்னெச்சரிக்கைகள் எவ்வளவுக்கு விரைவாகச் செய்யப்படுகிறதோ அந்தளவிற்கு சேதங்களைக் குறைக்கவும் முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

'அத்துடன், எதிர்வரும் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் ஏழு முன்னெச்சரிக்கைக் கோபுரங்களும் ஒரே தடவையில் பரீட்சிக்கப்பட்டு அப்பிரதேசங்களிலுள்ள மக்களையும் அனர்த்தத்துக்குத் தயார்படுத்தும் நோக்குடன் இந்நிகழ்வு நடத்தப்படவுள்ளது.

'மேற்குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை கோபுரங்கள், கோட்டைக்கல்லாறு, புதுக்குடியிருப்பு, காத்தான்குடி, கல்லடி, களுவன்கேணி, கல்குடா, வாகரை (ஊரியன்கட்டு) ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ளன' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X