Suganthini Ratnam / 2016 ஜூன் 21 , மு.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
அரசியலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு பிரதிநிதித்துவ அரசியல் முறையிலிருந்து ஒதுங்குவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் திங்கட்கிழமை (20) விடுத்துள்ள அறிக்கையில், '1981ஆம் ஆண்டு தொடங்கிய எனது அரசியல் வாழ்க்கையை நிறைவு செய்துள்ளதாகவும் எதிர்காலத்தில் நடைபெறும் நாடாளுமன்ற, மாகாண சபை உள்ளிட்ட எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. பிரதிநிதித்துவ அரசியல் முறையிலிருந்து விலகுவதுடன், இனி எந்தவொரு கட்சியிலும் தேசியப்பட்டியலின் மூலமோ, எதிர்காலத்தில் தேர்தல் சட்டங்களில் ஏற்படும் மாற்றங்களால் அல்லது வேறு ஏதேனும் முறையில் நாடாளுமன்றத்துக்கோ, மாகாண சபைக்கோ மக்கள் பிரதிநிதியாகச் செல்லப்போவதில்லை' என்றார்.
'சமகால அரசியல் சூழலில் முஸ்லிம் தேசிய அடையாள அரசியல் பெரும் நெருக்கடியை சந்திக்க ஆரம்பித்துள்ளது. இப்பின்புலத்தில் மு.கா. வின் இருப்பும் அதன் தலைமைகளின் நம்பகத்தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்.
இன்றைய முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் சமூக ஈடேற்றம் பற்றிச் சிந்திக்காது, பதவிகளையும் சலுகைகளையும் குறிவைத்து அரசியலில் ஈடுபடுகின்றார்கள் என்ற விமர்சனம் சமூகத்தால் முன்வைக்கப்படுகிறது.
அது மாத்திரமன்றி, எந்தவொரு அரசியல் கட்சியிலும் எவரும் நேர்கோட்டை வரைய முற்படும் போதெல்லாம், பதவிகளை நாடிய மூன்றாம்தர நடவடிக்கைகளாக அவை சோடித்துக் காட்டப்பட்டு நேரிய மாற்றங்களுக்கான முயற்சிகள் தோற்கடிக்கப்படுகின்றன. இதனால், புறவிமர்சனங்களை சுயவிமர்சனங்களாக மாற்றி சோடனைக் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுபட்டு தனிப்பட்ட அரசியல் நம்பகத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில் பிரதிநிதித்துவ அரசியலில் இனிமேல் ஈடுபடுவதில்லை என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன்' என்றார்.
'அதேவேளை, சமகால முஸ்லிம் அரசியலில் பதவிகளைப் பெறும் இலக்குகள் அற்ற முறையில் செயலாற்ற முடிவு எடுத்துள்ளேன். பிரதிநிதித்துவ அரசியல்வாதியாக அன்றி, மு.கா. வின் உறுப்பினராகவேனும் இருந்து கட்சியை தூய்மைப்படுத்தும் பணியில் அரசியல் செயற்பாட்டாளராக எனது எஞ்சிய வாழ் நெடுகிலும் இருக்கப்போகிறது' எனவும் அவர் மேலும் கூறினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப், தற்போதைய மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், ஈரோஸ் இயக்க நிறுவுனர் மறைந்த இரத்தினசபாபதி உள்ளிட்டோருக்கு அவர் இதன்போது தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025