2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரியர் இடமாற்றத்தில் அநீதியென இந்து சம்மேளனம் குற்றச்சாட்டு

Editorial   / 2018 மார்ச் 26 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல், கனகராசா சரவணன்

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றத்தில் பாரியளவில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதெனக் ​கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் அடிப்படையில்  தெரியவந்துள்ளதாக, இந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகல்லாகமவுக்கு அவசர கடிதமொன்றையும், இந்து சம்மேளனம் இன்று (26) அனுப்பியுள்ளது. 

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக கலந்துரையாடுவதற்குக் கூடிய விரைவில் நேரம் ஒதுக்கித்தருமாறு, இந்து சம்மேளனத்தின் தலைவர்  நாரா. அருண்காந்த் அதில் வேண்டுகோள் விடுத்துள்ளாரென, இந்து சம்மேளனத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பட்டிருப்பு கல்வி வலயத்தில் அதி கஷ்ட, கஷ்ட பிரதேச பாடசாலைகளில் சுமார் எட்டு வருடங்களுக்கு மேலாக யுத்த காலத்தில் சேவையாற்றிய  ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் பலர் தமது கஷ்ட பிரதேச சேவையை நிறைவு செய்து மீண்டும் நகர்புறப் பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்று ஓரிரு வருடங்களின் பின்னர் வெளிவலயத்தில் சேவையாற்றவில்லை என்ற ஒரே காரணத்தால் மீண்டும் மட்டக்களப்பு மேற்கு மற்றும்  கல்குடா வலயங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளனர்.

“இது தொடர்பான, ஆசிரியர்களின் பெயர்கள் இணையத்தளத்தில் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தால் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

“கிழக்கு மாகாணத்திலுள்ள  பல கல்வி வலயங்களில் இதுவரைக்கும் கஷ்ட பிரதேசங்கள் தெரியாதவகையில்  பலர் நகர்ப்புறப் பாடசாலைகளில் ஆசிரியர்களாக சேவையாற்றி வருவது  அதிகாரிகளின் கண்களுக்குப் புலப்படாத விடயமாக இருந்து வருவது கவலையளிப்பதாகவுள்ளது.

 “ஏற்கெனவே,  முன்னாள் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் கடந்த பல வருடங்களாக  தமிழ் ஆசிரியர்கள் இடமாற்றம் என்ற பெயரில் பந்தாடப்பட்ட வேளையில் இந்து சம்மேளனம்  கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டிருந்தது.

“அதன்பின் முதலமைச்சர் இந்து சம்மேளனத்துக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் தாம் இன ரீதியாகச் செயற்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.

“ஒரு குறுகிய இடைவெளிக்குப்பின்னர்,  மாகாண கல்விப் பணிப்பாளர் உரிய விசாரணைகள் இன்றி, தமிழ் ஆசிரியர்களை  மீண்டும் பந்தாடி வருவதானது, கடும் கண்டனத்துக்குரியது” என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X