Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 18 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா. கிருஸ்ணா, கனகராசா சரவணன்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதிய பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த பயிற்சித் தாதியர்கள், போதனா வைத்தியசாலையின் நிர்வாகக் கட்டடத் தொகுதியை முற்றுகையிட்டு, இன்று (18) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாதிய போதனாசிரியர் ஒருவரின் செயற்பாட்டைக் கண்டித்தும் அவரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தியுமே, இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
தாதிய பயிற்சிக் கல்லூரியின் போதனாசிரியர் ஒருவர், மாணவர்கள் நவராத்திரி நிகழ்வை நடத்த முற்பட்டபோது, அதற்கு எதிராகப் பேசியதுடன், இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.
அத்துடன், மாணவர்களையும் போதனாசிரியர்களையும் அதன் அதிபரையும் மோசமான வார்த்தைகளால் அவர் பேசுவதாகவும் மாணவர்களைக் கீழ்தரமான முறையில் நடத்துவதாகவும் தாதிய மாணவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில், கடந்த காலத்தில் வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டபோதிலும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனவும் மாணவர்கள் கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று (18) காலையும், 23 மாணவர்களை வலுக்கட்டாயமாக அறையொன்றில் குறித்த தாதிய போதனாசிரியர் பூட்டிவைத்திருந்ததாகவும் அவர்களைத் தாங்கள் மீட்டதாகவும் ஏனைய தாதிய மாணவர்கள் தெரிவித்தனர்.
குறித்த போதனாசிரியர்கள் தமக்கு அச்சுறுத்தலாகவே இருந்துவருவதால், அவரைக் கல்லூரியில் இருந்து மாற்றம் செய்யும் வரையில் தாங்கள் இனிக் கல்லூரிக்கு செல்லப்போவதில்லையெனவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து, குறித்த போதனாசிரியருக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்படுமென, அமைச்சு உறுதியளித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தைக் கைவிடுமாறும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் திருமதி கலாரஞ்சனி கணேஸ், தாதிய மாணவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
இருந்தபோதிலும் குறித்த போதனாசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்யும்வரையில் ஆர்ப்பாட்டம் தொடருமென, மாணவர்கள் தெரிவித்தனர்.
இந் நிலையில், சுகாதார அமைச்சினால் குறித்த தாதிய போதனாசிரியருக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டதையடுத்து, தாதிய மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனும் வருகைதந்து, மாணவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago