Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Janu / 2025 மே 15 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஒரு மில்லியன் டொலர் (299 மில்லியன் ரூபா) பெறுமதியான கதிர்வீச்சு மற்றும் இரசாயனங்களை கண்டறியும் அதிநவீன கருவியினை இலங்கை கடற்படைக்கு வழங்கியுள்ளது.
தனது கடல்சார் களத்தில் அணு, கதிரியக்க மற்றும் இரசாயன அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அதற்கான பதிலளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இலங்கையின் திறனை குறிப்பிடத்தக்க அளவில் இது அதிகரிக்கிறது.
அமெரிக்க சக்தி திணைக்களத்தின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகம் (DOE/NNSA) மற்றும் அதன் அணுக்கடத்தல் கண்டறிதல் மற்றும் தடுப்பு அலுவலகத்தினால் விநியோகிக்கப்பட்ட இம்மேம்பட்ட கருவியானது, வியாழக்கிழமை (15) இலங்கை கடற்படை தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு வைபவத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இதில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலீ சங் மற்றும் இலங்கைக் கடற்படையின் கட்டளைத்தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தியப் பெருங்கடலுக்குச் செல்லல், கப்பல்களில் / படகுகளில் ஏறுதல், தேடுதல்களை மேற்கொள்ளல் மற்றும் பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகளை (VBSS) மேற்கொள்வதற்கான இலங்கை கடற்படையின் திறனை மேம்படுத்தும் அதேவேளை நாட்டின் துறைமுகங்கள் மற்றும் கடல் வழிகளைப் பாதுகாத்து, அபாயகரமான இரசாயன, கதிரியக்க மற்றும் அணுசக்தி பொருட்களைக் கண்டறிந்து இடைமறிப்பதற்கான அதன் திறனையும் இந்த உபகரணம் பலப்படுத்துகிறது.
“இலங்கையின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதற்கும் முழுப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இம்மேம்பட்ட கருவியானது இன்றியமையாத சாதனமாக அமையும்” என இந்த வைபவத்தில் கலந்துகொண்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலீ சங் தெரிவித்தார்.
“அணு மற்றும் கதிரியக்க அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து பதிலளிப்பதற்கான இலங்கைக் கடற்படையின் திறனை மேம்படுத்துவதன் மூலம் இலங்கையின் பாதுகாப்பை பலப்படுத்துவது மாத்திரமன்றி, சமூகங்களையும் பாதுகாத்து, அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் கரையோரங்களை தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அடையாமலிருப்பதை உறுதி செய்து, சர்வதேச கப்பல் பாதைகளையும் நாங்கள் பாதுகாக்கிறோம்.
இப்பங்காண்மையானது மக்களைப் பாதுகாப்பாக வைத்திருத்தல், பாதுகாப்பான வர்த்தகத்தைப் பராமரித்தல் மற்றும் பிராந்திய பாதுகாப்பினை உறுதி செய்தல் போன்றவற்றுக்கான எமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீள வலியுறுத்துவது தொடர்பானதாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த உபகரண பரிமாற்றமானது இலங்கை கடற்படைக்கும் அமெரிக்க சக்தி திணைக்களத்தின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்துக்கும் இடையே 2024 பெப்ரவரி மாதத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர், இடம்பெறும் முதலாவது முக்கிய முன்முயற்சியாகும்.
அணு மற்றும் கதிரியக்கப் பொருட்களின் சட்டவிரோத போக்குவரத்தைக் கண்டறிவதிலும் அவற்றைத் தடுப்பதிலும் இருதரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவதே இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
இப்பரிமாற்றத்துக்கு மேலதிகமாக, மார்ச் மாதத்தில் கதிரியக்கப் பொருட்களைக் கண்டறிந்து உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாக்கும் இலங்கை சுங்கத்தின் திறனை மேலும் மேம்படுத்தும் வகையில், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்துக்கு 500,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான புதிய கதிர்வீச்சு கண்டறியும் கருவியினை DOE/NNSA ஊடாக அமெரிக்கத் தூதரகம் நன்கொடையாக வழங்கியது.
அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்குள் ஆபத்தான கதிரியக்கப் பொருட்கள் நுழைவதைத் தடுக்க உதவுதல், ஆபத்துகளிலிருந்து சமூகங்களைப் பாதுகாத்தல், சர்வதேச கப்பல் பாதைகளின் பாதுகாப்பை பலப்படுதுதல் மற்றும் அணு மற்றும் கதிரியக்க அச்சுறுத்தல்கள் அமெரிக்கக் கரைகளை அடைவதற்கு முன்பே அவற்றை தடுத்தல் போன்ற நடவடிக்கைகளில் முக்கிய பங்கினை வகிப்பதனால் இக்கருவி மிகவும் இன்றியமையாததாகும்.
கதிர்வீச்சு கண்டறிதல் கருவிகளைப் பயன்படுத்துவதில் சிறப்புப் பயிற்சிகளை வழங்குவதன் மூலமும், கடற்படையின் VBSS திறன்களை மேம்படுத்துவதன் மூலமும், எதிர்காலத்தில் இலங்கை கடற்படைக்கு NSDD தொடர்ந்தும் உதவி செய்யும்.
கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும், அணுசக்தி அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அவற்றைத் தடுப்பதற்காகவும், பாதுகாப்பான மற்றும் மிகவும் பாதுகாக்கப்பட்ட இந்து சமுத்திரப் பிராந்தியத்தினையும், அமெரிக்கத் தாயகத்தினையும் உறுதி செய்வதற்காகவும் இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உதவிசெய்வதற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago