2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

“உதய சூரியன்” ‘தனித்து போட்டியிடும்’

ஆர்.ஜெயஸ்ரீராம்   / 2018 ஜூலை 22 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணி, “உதய சூரியன்” சின்னத்தில் தனித்துப் போட்டியிடுமென, அக்கட்சியின் தலைவர் வி. ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

இந்த நிலையில், எந்தக் கட்சியும் தம்முடன் இணைந்துகொள்ள முடியுமெனவும் அவர் அழைப்பு விடுத்தார்.  

மட்டக்களப்பு, கல்குடாத் தொகுதியில் நேற்று(21) மாலை நடைபெற்ற கட்சி அங்குரார்ப்பணக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்த மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. கிருஷ்ணப்பிள்ளை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, கட்சியின் அமைப்பாளராகத் தெரிவுசெய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்த மூர்த்தியும் கட்சியின் இளைஞர் அணித் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட எஸ்.குபேரனுக்கும் நியமனக் கடிதங்கள் கையளிக்கப்பட்டன.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த வி. ஆனந்த சங்கரி கூறுகையில், கல்குடா தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் கொடி, உதய சூரியனாகத் தெரிவு செய்யப்பட்டு,  முதன் முதலில் கே.டபிள்யூ தேவநாயகம் ஜயாவின் வீட்டில்  நடைபெற்ற கூட்டத்திலேயே அங்கிகரிக்கப்பட்டதென நினைவுகூர்ந்தார்.

அவர் ஐக்கிய தேசியக் கட்சிகாரர் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம் என்றும் அவர்களது கட்சிக்கு நாங்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள் என்றும் தெரிவித்த அவர், அதிகமான தமது கட்சிக் கூட்டங்களை அவரது வீட்டில்தான் நடத்தியதாகவும் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைக்காக  ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகத்தில் அவர் முன் அனுமதி பெற்றே அனுமதி வழங்கியிருந்தார் என்றும் ​அவர் தெரிவித்தார்.

இந்த வரலாற்று உண்மையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். எனவே, மீண்டும் கல்குடாத் தொகுதியில் சரித்திர ரீதியாக உதய சூரியன் சின்னம், தமிழர் விடுதலைக் கூட்டணியாகப் பரிணமிப்பதாகவும் வி. ஆனந்த சங்கரி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X