2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஊழியர்களை மட்டுப்படுத்துமாறு அமைச்சர் நிமால் பணிப்புரை

Niroshini   / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

இலங்கை போக்குவரத்து சபை சாலைகளை அறுபதாக குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திறைசேரி கேட்டுக்கொண்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இலங்கையின் மிக முக்கியத்துவமான போக்குவரத்துச் சேவையாக இலங்கை போக்குவரத்துச் சபை உள்ள நிலையில் அவை நஸ்டத்தில் இயங்கிக்கொண்டிருப்பதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சாலைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அமைச்சர் விஜயம் மேற்கொண்டார்.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலகம் ஆகிய பகுதிகளுக்குட்பட்ட சுமார் 120 கிராமங்களுக்குரிய போக்குவரத்து சேவையானது களுவாஞ்சிகுடி இலங்கை போக்குவரத்துச் சாலை ஊடாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

கடந்த யுத்த காலத்தில் பாரிய பணியை ஆற்றிய இந்த சாலை இதுவரையில் எதுவித அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படாத நிலையில் உள்ளதாக அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

1997ஆம் ஆண்டு இந்த சாலை ஆரம்பிக்கப்பட்டபோதிலும் இதுவரையில் அதன் அபிவிருத்திக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் குறித்த சாலைக்கு இதுவரையில் எந்த போக்குவரத்து அமைச்சரும் வருகைதராத நிலையில் முதல் முறையாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா வருகை தந்ததற்காக இங்கு ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை மற்றும் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் உட்பட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது களுவாஞ்சிகுடி இலங்கை போக்குவரத்துச்சாலையின் குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட அமைச்சர் அவற்றினை தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக உறுதியளித்தார்.

அத்துடன், சாலைகளில் அதிகமாகவுள்ள ஊழியர்களை மட்டுப்படுத்தி அவர்களை வேறு சாலைக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கையெடுக்குமாறும் பணிப்புரை வழங்கிய அதேவேளை,களுவாஞ்சிகுடி சாலையில் இருந்து கொழும்பு உட்பட தூர இடங்களுக்கான சேவைகளின்போது பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் தீர்த்துவைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X