2025 மே 01, வியாழக்கிழமை

கனடா நாட்டு உயர்ஸ்தானிகரின் கிழக்கு மாகாண சந்திப்புகள்

Editorial   / 2020 செப்டெம்பர் 17 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்  

இலங்கைக்கான கனடா நாட்டு உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்னின், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நசீர் அஹமட், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் ஆகிய இருவரையும், காத்தான்குடி, பீச்வே ஹோட்டலில் நேற்று (16) சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட், “கனடா நாட்டுத் தூதுவர் இப்பிரதேசத்தின் நிலமை குறித்து, எங்களிடம் கேட்டறிந்து கொண்டார். முக்கியமான சில விடயங்கள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டன.

“கனடாவுக்கும் கிழக்கு மாகாணத்துக்குமான குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டதுக்குமான அபிவிருத்திப் பணிகளுக்கு கனடா எவ்வாறு உதவி செய்ய முடியுமென கலந்துரையாடினோம்” என்றார்.

மேலும், கனடா உயர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமொன்றை மட்டக்களப்பில் அமைத்து தரவேண்டுமெனத் தான் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இலங்கைக்கான கனடா நாட்டு உயர்ஸ்தானிகர், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்றும், மாவட்டச் செயலகத்தில் நேற்று (16) நடைபெற்றது.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைவிடம், வளங்கள், மக்களின் சனத்தொகை, வாழ்வாதாரம், தொழில், மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தேவைப்படுகள் பற்றிக் கலந்துரையாடப்பட்டன.

மேலும், இம்மாவட்ட மக்களின் அடையாளப்படுத்தப்பட்ட பிரதான தேவைகள் தொடர்பாகவும் கனடா நாட்டு உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவினால் உயர்ஸ்தானிகருக்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதீஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .