2025 மே 09, வெள்ளிக்கிழமை

கருணாவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

Editorial   / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 றியாஸ் ஆதம்

30வருட பயங்கரவாத யுத்தத்துக்குள் அகப்பட்டு பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிய வடக்கு,கிழக்கு மக்கள் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஐக்கியமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்துவருகின்றனர்.

இச் சூழ்நிலையில், தமிழ், முஸ்லிம் மக்களிடையே விரிசலை ஏற்படுத்தும் வகையில், விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.

இவரது செயற்பாடுகளினால் தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் தூண்டப்பட்டு இன மோதல்கள் இடம்பெறுவதற்கும் வாய்ப்புள்ளது.

இந்த விடயம் குறித்து கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யுத்தகாலத்தில் வட,கிழக்கு மக்கள் எதிர்நோக்கிய கஷ்டங்களையும், இன்னல்களையும் தாங்கள் நன்கறிவீர்கள்.

இந்த நாட்டை அன்று மஹிந்த ராஜபக்‌ஷ பொறுப்பேற்ற போது அவரது தலைமையில் பாதுகாப்பு செயலாளராக இருந்த நீங்கள்,

சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டுவந்து,இந்த நாட்டில் சமாதானத்தினையும், சகவாழ்வையும் ஏற்படுத்தி சரித்திரம் படைத்தீர்கள்.

அதற்குரிய நன்றிக்கடனாகவே, நாட்டு மக்களின் பேராதரவு உங்களுக்கு கிடைத்திருக்கின்றது.

 கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் இன உறவில் விரிசலை ஏற்படுத்தி இந்த நாட்டில் மீ்ண்டுமொரு பிரச்சினையை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறான செயற்பாடுகளினால் தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் தூண்டப்பட்டு, எதிர்காலத்தில் இன மோதல்கள் கூட இடம்பெற வாய்ப்புள்ளது.

இந்த விடயம் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்துவது காலத்தின் தேவையாகுமெனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

 மேலும் அக்கடிதத்தில்: குறிப்பாக, விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்து செயற்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அண்மைக் காலமாக இனவாதச் செயற்பாடுகளைத் தூண்டும் விதத்தில் செயற்படுகின்றார்.

அவர் தமிழ் மக்கள் மத்தியில் முஸ்லிம்களைப் பிழையாக விமர்சித்து வெறுப்புப் பேச்சுக்க ளைப் பேசி வருகிறார். இவருடைய செயற்பாடுகள் கிழக்கில் இன மோதல்களை ஏற்படுவிடும் என்கின்ற அச்சம் உருவாகியுள்ளது.

முஸ்லிம் தலைவர்கள், தமிழர்களை குழிதோண்டிப் புதைக்க வேண்டும் எனும் நோக்கத்தில் செயற்படுவதாகவும், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியினை தடுப்பதற்கும், அவர்களை அடக்கி ஆளுவதற்குமே தாம் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்கின்றோம் எனும் தொனியிலும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார்.

 அதுமாத்திரமல்ல, புதிய அமைக்கப்பட்ட அமைச்சரவையில் முஸ்லிம்கள் அங்கம் வகிக்காமை தனக்கு பெரும் சந்தோசம் எனவும் குறிப்பிட்டுள்ளார்,

இது அவரது இனவாத்தின் உச்ச வெளிப்பாடாகும்.  நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இனங்களை ஒன்றிணைத்து சகவாழ்வை ஏற்படுத்துவதற்கு உழைக்க வேண்டிய இக்காலகட்டத்தில், கருணா அம்மான் போன்றவர்களின் செயற்பாடுகள் அவற்றுக்கு குந்தகமாக அமைந்துவிடும்.

அராஜகத்துக்கும் வன்முறைக்கும் பழக்கப்பட்ட அவரால் ஜனநாயக நீரோட்டதில் பயணிக்க முடியாமலுள்ளது. எனவே அவரது நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.  எனவும் அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X