2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கர்பலா பிரசேத்தில் காணி மீட்பு போராட்டம்

Editorial   / 2017 நவம்பர் 05 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா கிராமத்தில் சட்டவிரோதமானமுறையில் தனிநபர்கள் இருவரால் பிடித்து வைத்துள்ள காணித்துண்டுகளை விடுவிக்கக்கோரி, காணி மீட்புப் போராட்டமொன்று இன்று (05) இடம்பெற்றது.

தமது சொந்தக்காணிகளை வழங்குமாறு வலியுறுத்தி, அக்காணி வளாகத்தில் ஒன்று திரண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர், இந்தக் காணி மீட்புப் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கர்பலா பிரதேசத்தல் “சி.பி. சதுக்கம்” என அழைக்கப்படும் சுமார் 15 ஏக்கர் காணியில் துண்டுத்துண்டாக 312 பேர், 2004ஆம் ஆண்டு பணம் கொடுத்து இக்காணிகளைக் கொள்வனவு செய்துள்ளனர் என்பதுடன், அக்காணிக்கான உறுதிப்பத்திரமும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இக்காணிக்கு இருவர் தமது சொந்தக்காணியெனக் கூறி, அவர்களிருவரும் காணியை ஆட்சி செய்து வரும் நிலையில், இக்காணி தமது சொந்தக்காணி எனவும் இதனை இவர்கள் அடாத்தாகப் பிடித்துள்ளனரெனவும் காணியை எமக்கு உடனடியாகத் தரவேண்டும் எனவும் வலியுறுத்தியே, இவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 “அபிவிருத்தி என்ற பெயரில் ஏழைகளின் காணிகள் அபகரிப்புச் செய்ய வேண்டாம்”, “எமது காணிகளை எமக்குத் தரும் வரைக்கும் நாம் இங்கிருந்து செல்ல மாட்டோம்”, “எமது சொந்தக்காணிகளை எமக்கு வழங்குங்கள்” எனப் போராட்டத்தின் போது, இவர்கள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து அங்கு வருகை தந்த காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், இந்தப் பிரச்சினையை மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துக்குச் சென்று தீர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் அதுவரை இங்கிருந்து கலைந்து செல்லுமாறும் வலியுறுத்தினர்.

இதேவேளை, அக்காணிகளின் சொந்தக்காரர்கள் எனக் கூறப்படும் இருவரும் சம்பவ இடத்துக்கு வருகை தந்திருந்தனர். இக்காணி எங்களின் சொந்தக்காணி எனவும் இக்காணிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கும் சம்பந்தம் கிடையாது என, அவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், இக்காணிக்கான உறுத்திப்பத்திரம் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் தம்மிடம் உண்டு எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், குறித்த காணி தொடர்பான வழக்கு, மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இடம்பெற்று, அது எங்களுக்குரியது என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .