2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

‘காணாமல் போனவர்கள் தொடர்பாக தீர்க்கமான முடிவில்லை’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 ஒக்டோபர் 01 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

“காணாமல் போனவர்கள் தொடர்பாக, இன்னும் எந்தவொரு தீர்க்கமான முடிவும் அரசு சார்பாக மக்களுக்கு வழங்கப்பட வில்லை” என, தேசிய சமாதான பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இ.மனோகரன் தெரிவித்தார்.

 

சமாதானம், தேசிய நல்லிணக்கம் என்பவற்றை வலியுறுத்தி மட்டக்களப்பில் சனிக்கிழமை நடைபெற்ற சமாதான பேரணியின் போது உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,

“சமய வணக்கஸ்தளங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்படுவதுடன், இதில் சம்பந்தப்படுவர்களை மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

“மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாகவும், அரசியல் அநீதி தொடர்பாகவும் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் தொடர்பாக பாரபட்சம் காட்டக்கூடாது.

“அவர்களைச் சட்டத்துக்கு முன் நிறுத்தி, தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்ற இணக்கப்பாடும் அத்தோடு, அனைத்து இனங்களும் ஒன்றாக வாழ்வதற்கான சூழலையும் மதங்களுக்கிடையில் ஒற்றுமையான சமாதானத்தையும் உருவாக்குவதற்கு உறுதியளிக்கப்பட வேண்டும்.

“வருடக்கணக்காக இடம்பெயர்ந்து வாழும் மக்களின் வாழ்விடங்கள், இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுபடவில்லை.

“தமிழ் பேசும் இளைஞர், யுவதிகளுக்கு விகிதாசார முறையில் அரசால் நியமனம் வழங்கப்படாததால் அவர்களும் விரக்தியடைந்து காணப்படுகின்றார்கள்.

“கல்வியில் சமமான வளப் பங்கீடு மட்டக்களப்பிலும் கிடைக்கச் செய்ய வேண்டும். வாகரை சேமக்காலை மற்றும் கர்பலா மைய்யவாடி போன்றவற்றுக்கு காணி ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

“இவையனைத்தும் விரைவில் கிடைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .