2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

’காணி இருந்தால் குப்பைத் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு’

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 ஏப்ரல் 22 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனையில் ஐந்து ஏக்கர் காணியொன்றை மாநகர சபை பெற்றுத்தந்தால், அப்பகுதியில் நிலவும் திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு, இரண்டு ஆண்டு காலப் பகுதிக்குள் நிரந்தர தீர்வைப் பெற்றுத் தருவதாக, சுகாதாரப் பிரதியமைச்சர் பைஷல் காசிம் உறுதியளித்துள்ளார்.

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில், டெங்கு ஒழிப்பு மற்றும் திண்மக் கழிவகற்றல் திட்டங்களை மேம்படுத்தல் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று, கல்முனை மாநகர சபையில், நேற்று (21) மாலை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், கல்முனை மாநகர சபைக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்ற திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு உதவுமாறு, மேய் றகீப், தன்னிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் எனவும், தான் இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராகவிருப்பதாகவும் தெரிவித்தார்.

"குப்பைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் நிலையங்களை அமைப்பதற்கு, அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்று, என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறது. கிழக்கு மாகாண ஆளுநரும், இவ்விடயத்தில் ஆர்வமாக இருக்கிறார். இத்திட்டத்தை, கல்முனையில் மேற்கொள்வதற்கு நான் சிபாரிசு செய்வதுடன், வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயாராக உள்ளேன்" என்று தெரிவித்தார்.

கல்முனையில் ஐந்து ஏக்கர் காணியை பெற்றுத் தந்தால், இத்திட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்தி, இரண்டு ஆண்டுகளில் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரலாம் எனவும், இதனால் துர்நாற்றமோ, சூழல் மாசடைதல் பிரச்சினையோ ஏற்படாது எனவும், குப்பைகளை வகைப்படுத்திச் சேகரிக்க வேண்டிய தேவையும் ஏற்படாது எனவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

அப்பகுதியில் இந்நிலையம் அமைக்கப்படுமானால், நாள் ஒன்றுக்கு நூறு மெற்றிக் தொன் குப்பைகளை, குறித்த நிறுவனத்துக்கு மாநகர சபை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், குப்பைகளைச் சேகரிப்பதற்கான அனைத்து வளங்களையும் அந்நிறுவனம் தருவதுடன், குப்பைகளுக்கான பணத்தையும் மாநகர சபைக்குச் செலுத்தும் எனவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையிலும், இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன எனக் குறிப்பிட்ட அவர், கல்முனை மாநகர சபையும் இதற்குத் தயாராக வேண்டும் எனவும், தான் முன்னின்று, இதனை சாத்தியப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X