2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

காணிகளை ஒப்படைக்குமாறு பாலமுனைக் காணி உரிமையாளர்கள் கோரிக்கை

Suganthini Ratnam   / 2016 மே 05 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, மண்டூர் பாலமுனைப் பிரதேசத்தில் தனியார் காணிகளில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தை அகற்றித் தங்களின் காணிகளை ஒப்படைக்குமாறு கோரி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்னத்திடம் அக்காணி உரிமையாளர்கள் மகஜரைக் கையளித்துள்ளனர்.

47 குடும்பங்களைக் கொண்ட காணி உரிமையாளர்களே புதன்கிழமை (04) இந்த மகஜரைக் கையளித்துள்ளனர்.

1990ஆம் ஆண்டு இந்தக் காணிகளில் படை முகாம் அமைக்கப்பட்டு, பின்னர் அது பொலிஸ் நிலையமாக மாற்றப்பட்டது.
குறித்த பொலிஸ் நிலையம் அமைந்துள்ள தங்களின் காணிகளை ஒப்படைக்குமாறு காணி உரிமையாளர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த காணிகளை உரிமையாளர்களுக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. எனினும், குறித்த காணிகளை இதுவரையில் காணி உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்கு எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், குறித்த காணிகளை ஒப்படைக்குமாறு கோரி வெல்லாவெளிப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரிடமும் ஏற்கெனவே மகஜர்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் கலந்துரையாடியபோது,  குறித்த காணிகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தாக மாகாணசபை உறுப்பினர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X