2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கால்நடை விற்பனைச் சந்தையை திறக்குமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கித்துள் கிராமத்தில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள  கால்நடை விற்பனைச் சந்தையை மீண்டும் திறக்குமாறு ஏறாவூர்ப்பற்று கால்நடை வளர்ப்பு நலம்புரிச் சங்கத் தலைவர் நாராயணப்பிள்ளை சதானந்தம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இச்சந்தை மூடப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் கால்நடைகளை விற்பனை செய்வதில் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் அவர் கூறினார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'இக்கிராமத்திலுள்ள கால்நடைப் பண்ணையாளர்களின் நலன் கருதி கால்நடை விற்பனைச் சந்தை கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்டு, வியாபாரமும் சுமூகமாக நடைபெற்றுவந்தது.  

இந்நிலையில், கால்நடைகளுக்கு கால்வாய் நோய் ஏற்பட்டதாக கால்நடை சுகாதாரத் திணைக்களம் அறிவித்ததைத் தொடர்ந்து, அச்சந்தை கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி மூடப்பட்டது. தற்போது கால்நடைகளுக்கு நோய் முற்றாக குணமடைந்து 3 மாதங்களானபோதிலும், சந்தை இதுவரையில் திறப்படவில்லை.

இச்சந்தையை திறக்குமாறு கால்நடை சுகாதார அதிகாரிக்கு அறிவித்தபோது, இது தொடர்பாக கால்நடை சுகாதாரப் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளதாகவும் அவரின் அனுமதி கிடைத்தவுடன் இச்சந்தையை திறக்கலாமெனவும் கூறினார். இருப்பினும், இச்சந்தையை மீளத் திறப்பதில் தாமதம் காணப்படுகின்றது' என்றார்.  

'கால்நடைகளை சட்டரீதியாக விற்பனை செய்வதற்கு இச்சந்தை உதவியாக இருந்தது. சட்ட விதிகளை மீறி கால்நடைகளை கொள்வனவு செய்து கொண்டு செல்லும்போது, அதிக செலவு ஏற்படுகின்றது. ஆனால், சந்தையில் கொள்வனவு செய்யப்படும் கால்நடைகள் சட்ட ரீதியாக வாகனங்களில் ஏற்றிக்கொண்டு செல்லப்படுவதால் அதற்கான செலவு குறைவாகக் காணப்படுகிறது.
 
நோய் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட காலப்பகுதியில் இறைச்சிக்காக கால்நடைகள் வெட்டப்பட்டுக்கொண்டிருந்ததை எங்களால் அறியமுடிந்தது. ஆனால், எமது சந்தையில் விற்பனைக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, இச்சந்தையை உடனடியாகத் திறக்குமாறு வேண்டுகோள் விடுகின்றோம்'; என்றார்.
 
இது தொடர்பில் கால்நடை சுகாதாரத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் உதயராணி குகேந்திரனிடம் கேட்டபோது, 'கடந்த ஏப்ரல் மாதம் கால்நடைகளுக்கு கால்வாய் நோய் ஏற்பட்டதன் காரணமாக கித்துள்; கிராமத்தில்; இயங்கிவந்த கால்நடை விற்பனைச் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது.

தற்போது கால்நடைகளுக்கு நோய் முற்றாகக் குணமடைந்துள்ள நிலையில், அதற்கான 5 அறிக்கைகளைப் பெற்றுள்ளோம். இதன் அடிப்படையில் திறப்பதற்கான அனுமதி வழங்கப்படும்' என்றார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X