2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு அவர்களின் மாகாணத்தில் நியமனம் வழங்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

இவ்வருடம் -2016 கல்விக் கல்லூரிகளில் கற்கை நெறியை பூர்த்தி செய்த கிழக்கு மாகாணத்தின்; சகல ஆசிரியர்களுக்கும் அவர்களின் மாகாணத்திலேயே நியமனம் வழங்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம்  கட்டாய கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போது முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 'கிழக்கு மாகாணம் சகல துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வரும் ஒரு மாகாணம். இன்று நல்லாட்சி அரசாங்கத்தை திறம்பட நடாத்தவும் கிழக்கின் சமாதானமான ஆட்சி ஓர் உதாரணமாக அமைந்துள்ளமையை யாராலும் மறுக்க முடியாது. எனவே கிழக்கு மாகாணத்தை குறைபாடுகள் உள்ள ஒரு மாகாணமாக நடாத்த என்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இம்மாகணத்தின் தேவைகள் என்ன..? அங்கு செய்யப்படவேண்டிய சேவைகள் என்ன..? கல்வி நிலமைகள் எவ்வாறு இருக்கிறது..? சுகாதாரத்துறை எவ்வாறு செல்கிறது..? மாகாண மக்களின் தேவைகள் என்ன...? இப்படியான சகல துறைகளுக்குள்ளும் நுழைந்து எதனை எவ்வாறு அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று நாங்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது மத்தியரசின் இப்படியான நடவடிக்கைகள் எங்களை வேதனைப் படவைக்கிறது.
எனவே மத்திய அரசு கிழக்கு மாகாணம் சம்பந்தமாக எந்த நடவடிக்கைகள் மேற்கொள்வதன்றாலும் கிழக்கு மாகாணத்துக்கு ஒரு முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் இருக்கின்ற காரணத்தினால் அவர்களிடம் ஒரு ஆலோசனையும் பெறாது தங்களின் விருப்பத்தில் மாத்திரம் வேலைகளைச் செய்து கொண்டு செல்தல் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ள விடயமாகும்.
 
ஆகவே இம்முறை கல்விக்கல்லூரி முடித்து வெளியாகிய ஆசிரியர்களை வெளிமாகாணங்களுக்கு அனுப்ப கல்வி அமைச்சு எடுத்திருக்கும் நடவடிக்கையினை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாததற்கு காரணம் இருக்கிறது.  குறித்த ஆசிரியர்களுக்கான நியமனங்கள், கண்டி, யாழ்ப்பாணம், கொழும்பு, காலி, ஊவா என இலங்கையில் நாலா பாகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளமையானது இன்று கிழக்கு மாகாணத்தில் சரியாகப் பணியாற்ற முடியாத நிலைமையினை உருவாக்கியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் மாகாணசபையில் அமைச்சுக் காரியாலயங்களில் ஆசிரியர்கள் இடமாற்றம் கேட்டு நூற்றுக்கணக்கனோர் வருகின்றனர். இதற்கு காரணம் முறையற்ற வகையில் வழங்கப்படும் நியமனங்களே என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கிழக்கில் இருக்கும் 1108 பாடசாலைகளில் 5021 ஆசிரியகளுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. கிழக்கு மாகாணப் பாடசாலைகள் சிலவற்றில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுங்கள் என்று பெற்றோர்கள் பாடசாலைகளைப் பூட்டுகளைப் போட்டு பூட்டிவிட்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு முதலமைச்சராக பதவி வகிக்கும் என்னால் சரியான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் பல திட்டங்களை அமுல் படுத்தி வருகின்றோம். அதற்காக நிர்வாகத்தினரும் அவர்களின் பங்களிப்பினை வழங்க வேண்டும். உதாரணமாக போதை ஒழிப்பு, மாகாணத்தை சுகாதாரமாகப் பேணும் நோக்கில் சுத்தப்படுத்தல், இலஞ்சம், ஊழல் போன்றவற்றை கிழக்கிலேயே இல்லாமல் செய்யவேண்டும் என்ற முழுநோக்கில் அனைத்து அதிகாரிகளும் செயல்படவேண்டிய தேவையை கட்டாயமாகக் கடைப் பிடித்து உதவிகள் புரிய வேண்டும்.

அத்துடன் தங்களின் கடமைகளைச் சரியாகச் செய்யும் அதிகாரிகளை இனம்காண வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.
எனவே தேவைகள் அறிந்து பணியாற்ற வேண்டியது அனைத்து அதிகாரிகளின் கட்டாயக்கடமையாக  உள்ளதுடன்  கிழக்கில் உள்ள பாடசாலைகள் ஒவ்வொன்றிலும் நேரடிக் கண்காணிப்பில் ஆளணிகளைப் பார்வையிட்டு சரியான முறையில் ஆளணிகளை நிரப்புவதற்கு மாகாணப் கல்விப் பணிப்பாளரைப் பணித்திருக்கிறேன். அதுபோன்று சகல துறைகளிலும் ஆளனித் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கவேண்டும் மக்களின் வரிப்பணத்தைப் பெறும் அரசாங்கம் அவர்களுக்கான கடமைகளைச் சரியாக செய்யவேண்டும் என்ற நோக்கில் சகல நடவடிக்கைகளும் எடுத்து செல்லப்படும்' என்றார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X