Editorial / 2018 மார்ச் 19 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன, ஆர்.ஜெயஸ்ரீராம், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மகாவலி கிளை ஆற்றின் புலிபாய்ந்தகலில் கொலைசெய்யப்பட்ட நிலையில், நேற்று (18) சடலமாக மீட்கப்பட்ட பெண், வவுனியாவைச் சேர்ந்தவரென, அப்பெண்ணின் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார் என, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, மரக்காப்பளை, கணேசபுரத்தைச் சேர்ந்த 32 வயதான மருதை சுதர்சினி என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இப்பெண், குடும்பத்தில் காணப்பட்ட வறுமை காரணமாக, சவூதி அரேபியாவுக்கு வீட்டு பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், அங்கு வீட்டு எஜமானுடன் ஏற்பட்ட பிரச்சினையையடுத்து, கடந்த 16ஆம் திகதியன்று நாட்டுக்குத் திரும்புவதாகவும், விமான நிலையத்துக்கு வருமாறு, சகோதரிக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த திகதியில் சகோதரியின் கணவர், விமான நிலையத்துக்குச் சென்று சுமார் 10 மணித்தியாலங்கள் காத்திருந்தபோதும், அவர் அங்குவரவில்லை. அத்துடன், அவரின் அலைபேசியும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதையடுத்து, வரவேற்கச் சென்ற சகோதரின் கணவர், அங்கிருந்த வீட்டுக்குத் திருப்பியுள்ளார்.
எனினும், வருவதாகக் கூறிய அப்பெண் எங்கு சென்றார், என்ன நடந்தது எனத் தேடிக்கொண்டிருந்த நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் சகோதரியை அடையாளம் காட்டினேம். அவரைத் திட்டமிட்டுக் கொலை செய்துவிட்டு, அவரின் உடலில் இருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
“அத்துடன், அவரின் சடலத்துக்கு அருகில் வெறுமையான நகைப்பெட்டிகள், அவரின் பயணப்பொதி, செருப்பு, கடவுச்சீட்டு, அடையாள அட்டை என்பன மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறான ஒரு நிலைமை, எந்தப் பெண்ணுக்கம் இனி ஏற்படக்கூடாது. எனது சகோதரியின் கொலைக்கு நீதி வேண்டும்” என, சடலமாக மீட்கப்பட்டவரின் சகோதரி எம்.சுபானந்தராணி, அழுது புலம்பியவாறு தெரிவித்தார்.
மகாவலி கிளை ஆற்றின் சற்றுத் தொலைவில், சுதர்சினி அணிந்திருந்ததாக நம்பப்படும் காலணிகள், காதணி, சுதர்சினியைத் தாக்கியிருக்கக் கூடும் என்று கருதப்படும் உடைந்த போத்தல் கண்ணாடிகள், இரத்தக் கறை, தலைமுடி என்பனவும், இன்னும் சற்றுத் தொலைவில் சுதர்சினியின் பயணப்பொதியும் இன்னும் சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
சுதர்சினியின் மண்டை பிளக்கப்பட்டிருந்ததாகவும், ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் சடலம், ஆற்றில் புதர்களுக்கிடையில் சிக்கிக் கொண்டிருந்ததெனவும் பொஸிஸார் தெரிவித்தனர்.
சடலத்தைப் பார்வையிட்ட பதில் நீதிபதி ஹபீப் றிபான், சடலத்தை சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூறாய்வுக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைவக்கு அனுப்பி வைக்குமாறும் ,வவுனியாவிலுள்ள உறவினர்களுக்கு அறிவித்து அவர்களை அழைப்பித்து வாக்குமூலங்களைப் பெற்றுக் கொள்ளுமாறும், வாழைச்சேனைப் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எஸ். பெரமுனவுக்கு உத்தரவிட்டார்.
இது தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார், பல கோணங்களில் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

8 hours ago
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
15 Nov 2025
15 Nov 2025