2025 மே 21, புதன்கிழமை

சந்தையில் பதற்றம்; வர்த்தகர்கள் வெளியேறினர்

Editorial   / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம், பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, கிரான் வாராந்தச் சந்தையில் வியாபாராம் செய்வது தொடர்பாக, சிறுபான்மை இன சமூகங்களுக்கு இடையில், இன்று (29) ஏற்பட்ட முறுகல் நிலையால், சுமார் 5 மணிநேரம் அங்கு பதற்றம் நிலைவியது.

இதனையடுத்து, அங்கு குழுமியிருந்த ஒரு சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள், தங்களுடைய பொருட்களுடன் அங்கிருந்து ​வெளியேறிவிட்டனர். அதனையடுத்தே, பதற்றம் தணிந்தது.

மறு அறிவித்தல் வழங்கும் வரை வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் தங்களது விற்பனைப் பொருட்களை அகற்றிக்கொண்டு  சந்தைப் பகுதியிலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் வலியுறுத்தி, மற்றொரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சம்பவத்தை அடுத்து, பொலிஸாரும் ஸ்தலத்துக்கு விரைந்தனர். 

எனினும், ​அந்த வர்த்தகர்களை இவ்விடத்திலிருந்து வெளியேற்றாவிடின் போராட்டத்தைக் கைவிடமாட்டோமென்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதனால், பொலிஸாருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டது.

வாழைச்சேனை எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில் பஸ் தரிப்பிடம் அமைப்பதற்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் வரையில், அந்த வர்த்தகர்களை, சித்தாண்டி,வந்தாறுமூலை கிரான் மற்றும் வாகரை போன்ற இடங்களில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கவேண்டாமென்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர்.

மேற்படி எதிர்ப்பு நடவடிக்கையில் கிரான் சந்தையில் வாராந்தச் சந்தை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. பதற்றமும் அதிகரித்திருந்தது. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக,  கலகம் அடக்கும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

வாழைச்சேனை எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில் பஸ் தரிப்பிடமொன்றை அமைப்பதற்காக, அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில், வெள்ளிக்கிழமையன்று முச்சக்கர வண்டிகள் நிறுத்தப்பட்டன. இதனால், அப்பிரதேசத்தில் இரு சமூகங்களுக்கிடையில் பெரும் முறுகல் நிலை, அன்று ஏற்பட்டிருந்தது,

இந்த விவகாரம், வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதனையடுத்து, பஸ் தரிப்பிடத்தை அமைக்கும் பணிகளை நாளை திங்கட்கி​ழமை வரை, தற்காலிகமாக நிறுத்துவதற்கான தடையுத்தரவை, வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஷ்வான், அன்று பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X