2025 மே 15, வியாழக்கிழமை

‘சிறுபான்மைச் சமூகம் தமக்கு சாதகமாகப் பயன்படுத்த வேண்டும்’

வா.கிருஸ்ணா   / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையை, சிறுபான்மைச் சமூகம், தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அரசியல் சூழ்நிலையை, தமிழ் அரசியல் தலைமைகள் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப் போகின்றார்கள் என்பதிலேயே, தமிழர்களின் எதிர்காலத் தலைவிதி காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வாவிக்கரை வீதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அலுவலகத்தில் இன்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

"இந்த நாடு அதலபாதாளத்துக்குச் சென்றுகொண்டிருப்பதைத் தடுத்து நிறுத்தும் வகையில், சிறுபான்மை மக்களின் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய பிரதமரை, தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி நியமித்துள்ளார்" எனவும் பிரசாந்தன் இதன்போது தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஆட்சி, இந்த நாட்டுக்குப் பொருத்தம் இல்லையென்பதை, ஜனாதிபதி நன்கு உணர்ந்தே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “நல்லாட்சி அரசாங்கத்தால் எதனையும் செய்யமுடியாது என்பதை உணர்ந்த ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்குப் பிரதமர் பதவியை வழங்கியுள்ளார். தமது சமூகத்தின் இலக்கை அடைவதற்காக, அரசியல் தலைமைகள் கிடைக்கும் சூழலை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சிறுபான்மை அரசியல் தலைமைகளுக்கு, நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது" என்று தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு, கடந்த நான்கு ஆண்டுகளாக எந்தவிதமான உதவிகளும் வழங்கப்படவில்லையென, இங்கு கருத்துத் தெரிவித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.

கடந்த மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்திலேயே அதிகளவான உதவிகள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டன எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .