2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சுயாதீன ஆணைக்குழுவை நியமிக்குமாறு கோரிக்கை

வா.கிருஸ்ணா   / 2018 மே 01 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் உட்பட அனைத்து ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் விசாரணை செய்யும் வகையில், விசேட சுயாதீன ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ் ஊடகத்துறை, இலங்கை அரசாங்கத்தை நம்பிப் பயணிக்க முடியாத நிலையில், சர்வதேசத்திடம் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுவருவதாகவும், ஒன்றியம் இன்று (01) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தால், ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமான மகஜர்களும் அனுப்பிவைக்கப்பட்டன.

அந்த மகஜர்களில், “ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்புடன் ஆட்சிபீடம் ஏறிய நல்லாட்சி அரசாங்கம், ஊடகவியலாளர்கள் குறித்து இன்று வரை கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை.

“இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைகளுக்கு, இன்று வரை என்ன நடந்துள்ளது என்பது தெரியாதுள்ளது.

“குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் படுகொலை செய்யப்பட்ட 35 தமிழ் ஊடகவியலாளர்களில், ஓர் ஊடகவியலாளரது விசாரணைகளைக் கூட, இதுவரையில் நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பிக்கவில்லை" என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படும் போது, அப்போது பதவியில் காணப்பட்ட அரசாங்கங்கள், அவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக் குற்றஞ்சாட்டியுள்ள அம்மகஜர்கள், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காது, உதாசீனம் செய்யும் நடவடிக்கைகளே இடம்பெற்று வந்தன என்றும் குறிப்பிட்டுள்ளன. இதன் காரணமாக, குறித்த படுகொலையின் பின்னால், அரசாங்கத்தின் கைகள் இருக்கலாம் என்ற சந்தேகம், ஊடகவியலாளர்களிடம் எழுந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்நிலையில், கடைசியாக ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கமும், குறித்த விடயத்தில் அக்கறை காட்டாது இழுத்தடிப்புச் செய்வது, தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“அதாவது, தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இலங்கையில் நீதி கிடைக்காது என்ற முடிவுக்கு நாங்கள் வரவேண்டி உள்ளது" என்று, விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும், தமிழ் ஊடகத்துறையினர் இறுதியாக ஒரு தடவை விடுக்கின்ற வேண்டுகோளாக, விசேட சுயாதீன ஆணைக்குழுவொன்றை அமையுங்கள் என்பது அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ள ஒன்றியம், "இந்த நாட்டில் நீதியைப் பெற்றுக்கொள்ளும் உரிமை, தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் உண்டு என்பதை உறுதிப்படுத்துங்கள்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X