Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
அபிவிருத்திகளை தாங்கள் வரவேற்பதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், அந்த அபிவிருத்திகள், தமிழ் மக்களின் இறைமையின் மூலமாகப் பெறுவதற்கே தாங்கள் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய பொதுச் சந்தைக் கட்டடத்தின் திறப்பு விழா, மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தி.சரவணபவன் தலைமையில், இன்று (15) காலை நடைபெற்றது. இதில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம். தயாபாரன், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
நெல்சிப் திட்டத்தின் ஊடாக 35 மில்லியன் ரூபாய் செலவில், இந்தப் பொதுச்சந்தைத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர், “மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள், அந்த மக்களின் தேவையை நிறைவேற்றக் கூடிய முயற்சிகளை எடுக்கவேண்டும்.
“அரசியலில் எப்போதும் கருத்து வேறுபாடுகள் இருக்கும். நாங்கள் ஒன்றுபட்டு, எங்களுக்குள்ள பேதமைகளைப் பயன்படுத்தாமல், அவற்றை மறந்து, மக்கள் தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய சேவைகளை ஒன்றுபட்டு மேற்கொள்வதன் மூலமே, மக்களுக்கு உண்மையான சேவையை வழங்கமுடியும்.
“தமிழ் மக்களை அடக்கி, ஒடுக்கி ஆளவேண்டும் என்று நினைத்த ஓர் அரசாங்கத்தை, ஜனாதிபதியை, ஆட்சிமாற்றம் ஊடாக பதவியில் இருந்து விரட்டி, இன்று வேறுவிதமாகச் சிந்திக்கக்கூடிய அரசாங்கத்தை நாங்கள் அமைத்துள்ளோம்.
“ஆனால், அவர்களின் சேவைகளில் பல குறைபாடுகள் உள்ளன. அது நிறைவு செய்யப்படவேண்டும். இருக்கின்ற குறைகள் நீக்கப்படவேண்டும். மக்களுக்குத் தேவையானவை வழங்கப்படவேண்டும்.
“அபிவிருத்திகள் தொடர்பில் இன்று பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன. நாங்கள் இந்த அரசாங்கத்தை ஆதரிக்கின்றோம். சில முக்கியமான விடயங்களுக்காக நாங்கள் அந்த ஆதரவை வழங்குகின்றோம். ஓர் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி, இந்த அரசாங்கத்தை அதிகாரத்துக்குக் கொண்டுவருவதற்கு நாங்கள் ஒரு பாரிய பங்களிப்புச் செய்தோம். எனினும், ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகவே அதனை வழங்கினோம்.
“அதாவது, தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்ற அடிப்படையில்தான் பழைய அரசாங்கத்தை விரட்டி, புதிய அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு உதவினோம்.
“அதனை நிறைவேற்றுவதாக இருந்தால், புதிய அரசாங்கத்தைப் பகைத்து, அதனை நாங்கள் நிறைவேற்றமுடியாது. புதிய அரசாங்கத்துக்கு ஒத்துழைக்கவேண்டிய தேவையிருக்கின்றது. ஆனால், அனைத்து விடயங்களுக்கும் ஒத்துழைக்கமாட்டோம்" என்று தெரிவித்தார்.
அபிவிருத்திகளை, தமிழ் மக்களின் இறைமையின் மூலமாக பெறுவதற்கே விரும்புவதாகத் தெரிவித்த அவர், மக்களால் தெரிவுசெய்யப்படும் முதலமைச்சர்கள், பிரதிநிதிகள், அமைச்சர்கள் அந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி, மக்களுக்குத் தேவையானவற்றை அடையவேண்டுமென விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இந்தக் கருத்தை, சிலரால் புரிந்துகொள்ளமுடியாது எனக் குறிப்பிட்ட அவர், இதைப் புரிந்துகொள்வதற்கு அரசியல் சரித்திரம் தேவையெனவும், அது தங்களிடம் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
“நாங்கள், அபிவிருத்திகளையும் அதிகாரங்களையும் பெறுவதாக இருந்தால், அரசமைப்பில் மாற்றங்கள் வரவேண்டும். புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். ஆட்சி அதிகாரங்கள் எங்களது கைகளுக்கு வரவேண்டும்.
“அவற்றின்மூலமாக எமது மக்களின் இறைமை மதிக்கப்படவேண்டும். அப்போதுதான் தமிழ் மக்கள் சுயமரியாதையுடன், சுயாதீனமாக வாழக்கூடிய மக்களாகக் கருதப்படுவோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago