2025 மே 15, வியாழக்கிழமை

புதிய பிரதமரின் நியமனத்தால், நாட்டின் ‘பொருளாதாரம் வளர்ச்சியடையும்’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய பிரதமரின் நியமனம், இந்நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்யும் என்ற நம்பிக்கை இருக்கின்றதென, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் தொடர்பில், ஊடகங்களுக்கு இன்று (28) கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தின் படி, புதிய பிரதமரை நியமித்துள்ளார் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பார்வையில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ரீதியிலான நெருக்கடிகள், ஜனாதிபதியைக் கொலை செய்ய எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் முயற்சிகள், அது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தாமை, விசாரணைகள் மேற்கொள்ளப்படாமை போன்ற காரணங்களை வைத்தே, ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை எடுப்பதற்குக் காரணமாகுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகள் போன்றில்லாமல், சிறுபான்மைச் சமூகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு இருக்கின்றது எனவும், புதிய பிரதமர் அதைச் செய்வார் என்று நம்புவதாகவும், அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளை, முஸ்லிம் கட்சிகள், ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தமது ஆதரவை வழங்கத் தீர்மானித்திருந்தாலும், சில வேளைளில், அந்தத் தீர்மானத்தை இன்னும் சில நாள்களில் மாற்றிக் கொள்ளமுடியும் எனத் தெரிவித்த அவர், அதனடிப்படையில், முஸ்லிம் கட்சிகளும் புதிய பிரதமர் தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்க, அரசாங்கத்தின் பக்கம் வரலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி, நாடாளுமன்றம் கூடுவதற்கிடையில், பல்வேறு அரசியல் மாற்றங்கள் இடம்பெறலாம் எனத் தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், புதிய அரசாங்கத்துடன் இணைந்துகொள்வார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

“எம்மிடம் 96 ஆசனங்கள் இருக்கின்றன. இன்னும் 17 ஆசனங்களே எங்களுக்குத் தேவைப்படுகின்றன. அவற்றை எடுத்துக்கொள்வோம். அதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. அவ்வாறான ஓர் ஆதரவில்லாமல், ஜனாதிபதி இவ்வாறான ஒரு முயற்சியை எடுத்திருக்கமாட்டார்.

“ஆகவே, ஐக்கிய தேசியக் கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினாகள், புதிய அரசாங்கத்துடன் வந்து இணைந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை உண்டு” என ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .