Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 11 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரனின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான வருகையுடன் பாரம்பரிய தமிழர் பண்பாட்டுக் கலாசார விழா பகல், இரவு நிகழ்வுகளாக எதிர்வரும் 15ஆம், 16ஆம், 17ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்டக் கச்சேரியை அண்டியுள்ள பாட்டாளிபுரம் வாவிக்கரையோர மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் உப தலைவரும் விழாக்குழுவின் இணைப்பாளருமான தம்பிப்போடி வசந்தராஜா தெரிவித்தார்.
இவ்விழாவுக்காக மட்டக்களப்பு கோட்டைப் பூங்கா அலங்கரிப்பு வேலை தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.
15ஆம் திகதி மாலை வடமாகாண முதலமைச்சரின் வருகையுடன் கல்லடிப் பாலத்திலிருந்து பாட்டாளிபுரம்வரை கலாசாரப் பவனி நடைபெறும். தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணிவரை வரவேற்பு நடனங்கள், நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், வடமோடி, தென்மோடிக் கூத்துகள், பறைச்சமர்கள். உடுக்கையடிப்புகள், குரவை ஒலிகள், கவியரங்கு இசைக்கச்சேரி, வீணை இசை, மிருதங்கம், வாத்தியக்கருவி வாசிப்பு உள்ளிட்டவை நடைபெறும்.
இதேவேளை, பாரம்பரிய உணவுகளும் இந்த நிகழ்வுகளில் இடம்பிடித்திருக்கும்.
பகல் வேளைகளில் மொழி, கலாசாரம் சம்பந்தமான ஆய்வரங்கம், மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவுக்காக இந்தியா, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து கலைஞர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு முன்னாள் மேலதிக அரசாங்க அதிபர் ரீ.அருணகிரிநாதன், முன்னாள் பேராசிரியர் எஸ்.மௌனகுரு ஆகியோர் பிரதம மற்றும் கௌரவ அதிதிகளாகப் அழைக்கப்பட்டுள்ளனர்.
இவ்விழாவில் கலந்துகொள்வதற்கான அனுமதி பொதுமக்களுக்கு இலவசமாகும்.
பாரம்பரிய கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களில் இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் சமுதாயச் சீரழிவைத் தடுப்பதுமே இவ்விழாவின் நோக்கமெனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .