Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் கிராமத்தில் தங்களின் சொந்த முயற்சியில் மீள்குடியேறிய மக்கள் அதிகாரிகளின் பாராபட்சம் காரணமாக மிகவும் சிரமப்படுவதாக உறுகாமம் முஹைதீன் ஜும்மாப் பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம்.மஹ்றூப் தெரிவித்தார்.
இம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நல்லிணக்கத்துக்கான மக்கள் கருத்தறியும் தேசிய செயலணிக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை மகஜர் அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'நல்லிணக்க அரசாங்கத்தின் ஜனாதிபதியும் பிரதமரும் உளப்பூர்வமாக நல்லிணக்கத்துக்கான பல முன்னெடுப்புகளை எடுத்துவரும் இவ்வேளையில், சில அதிகாரிகளின் புறக்கணிப்பும் பாராபட்சமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கிடையில் மேலும் கசப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளமை நல்லிணக்க முயற்சிகளுக்குத் தடங்கலாக உள்ளது. இது சமூகங்களுக்கிடையில் மறந்துபோன இன வெறுப்புணர்வுகளை மீண்டும் தூசு தட்டி உசுப்பிவிடும் செயற்பாடாக உள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'திட்டங்களை அமுலாக்கும் அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள கீழ்மட்ட அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகள், இனிமேலும் தொடராமல் இருக்கவேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம்.
இனக்கலவரத்தாலும் ஆயுத வன்முறையாலும் தற்போது அதிகாரிகளின் புறக்கணிப்பினாலும் பாதிக்கப்படும் அம்மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
உறுகாமம் கிராமத்தில் 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு உயிர், உடைமை இழந்து அல்லற்பட்டு, தற்போது அவர்களின் சுயமுயற்சியால் மீள்குடியேறியுள்ளனர். எமது மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்பட வேண்டும். குடியிருக்க வீடுகள் வேண்டும்.
1990ஆம் ஆண்டு அந்தக் கிராமத்தில் 340 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்துவந்த நிலையில், தற்போது 58 குடும்பங்கள் அங்கு மீள்குடியேறியுள்ளார்கள். அவர்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றிச்; சிரமப்படுகின்றார்கள். இந்திய உதவித்திட்டத்தின் 21 வீடுகளைத் தவிர, வேறெந்த அரசாங்க உதவியும் இம்மக்களுக்கு அதிகாரிகள் செய்து கொடுக்கவில்லை.
எமது பாதிக்கப்பட்ட கிராமத்துக்கு உயர் அதிகாரிகள் வந்து நடப்பு நிகழ்வுகளை அவதானிக்கும்போது, பிரதேசத்துக்குப் பொறுப்பான அரசாங்க கீழ்மட்ட அதிகாரிகள் புறக்கணிப்புச் செய்து வந்திருக்கின்றார்கள் என்பது புரியும்.
இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்திச் சேவையாற்றக்கூடிய பல அதிகாரிகள் இருக்கின்றார்கள். அவர்கள் எந்த இனமாக இருந்தாலும், அத்தகையவர்களை இனங்;கண்டு எமது பிரதேசத்துக்கு அதிகாரிகளாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago