2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’மட்டக்களப்பிலிருந்து விசேட அதிரடிப்படை வெளியேற வேண்டும்’

பேரின்பராஜா சபேஷ்   / 2017 ஜூலை 26 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரைப் பலப்படுத்தும் முயற்சி நடைபெறுகிறது. அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், மணல் ஏற்றுபவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்றும் கேள்வியெழுப்பினார்.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவங்கள் தொடர்பாக, ஊடகங்களுக்கு இன்று (26) கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

"யாழ். நல்லூரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், நீதிபதி இழஞ்செழியன், தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார். நீதிபதி இழஞ்செழியன், நீதிவழிநடப்பவர். சிறந்த நீதியை வழங்குபவராக இருக்கின்ற நீதிபதியின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய முற்பட்ட விடயமானது, மிகவும் வேதனையைத் தருவதோடு, எமது வன்மையான கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம்.

"நீதிபதியை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைத் திசைதிருப்பும் ஒரு செயற்பாடாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் கருத்தை நான் காண்கின்றேன். அரசாங்கம், சரியான விசாரணைக் குழு அமைத்து, விசாணையை முன்னெடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், "நாட்டில் நல்லாட்சி நிலவுகின்ற சூழ்நிலையில், பொலிஸாரின் சிவில் நிர்வாகத்துக்கு மாறாக, விசேட அதிரடிப்படை நிர்வாகத்தைக் கொண்டுவருவதை ஏற்க முடியாது.

"எமது மாவட்டத்திலிருந்து, விசேட அதிரடிப்படை வெளியேற்றப்பட வேண்டும். அவர்கள், எங்களை அச்சுறுத்திவரும் பல சம்பவங்களை நாங்கள் அறிகின்றோம். சிவில் நிர்வாகத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் எந்தச் செயற்பாட்டையும் நாங்கள் அனுமதிக்க முடியாது. துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் மீது, தீவிர விசாரணை மேற்கொண்டு, அவர்மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

"மட்டக்களப்பு மாவட்டத்தில், சிவில் நிர்வாகம் நடைபெற ஏற்ற வழிமுறைகளை, நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X