2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் சிறுவர், பெண்கள் துஷ்பிரயோகம் அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கடந்த காலத்தை விட மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர், பெண்கள் மீதான துஷ்பிரயோகம் ஒப்பீட்டளவில் அதிகரித்துக் காணப்படுவதாக உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன் தெரிவித்தார்.

பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்களின்போது கிடைக்கக்கூடிய ஆதாரங்களை சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்காக எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பில் பொலிஸ் நிலையங்களின் சிறுவர் பெண்கள் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு, சனிக்கிழமை (01) மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் நடைபெற்றது.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்செயலமர்வில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களின் சிறுவர் பெண்கள் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகள் சுமார் 30 பேர் கலந்துகொண்டனர்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'சிறுவர் பெண்கள் மீதான வன்முறைகள் இடம்பெறுகின்றமை சிறந்த சமூகக் கட்டமைப்புக்கு ஆரோக்கியமானது அல்ல.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களுக்குரிய பால்நிலை சம்பந்தமான பதிவை  உற்றுக் கவனித்தால், அறிக்கை இடப்பட்டதன் அடிப்படையில் சுமார் 250 வன்முறைகள் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.   

பால்நிலை அடிப்படையில் நோக்கினால் ஆண்கள் பாதிக்கப்படுவதை விட, இரண்டரை மடங்கு அதிகமாக பெண்கள் பாதிக்கப்படுகின்றமை  கண்டறியப்பட்டுள்ளது' என்றார்.

'இவை பதிவுக்கு வந்த வன்முறைச் சம்பவங்களே. இவை தவிர வெளியில் வராத பிரச்சினைகள் இன்னும் இருக்கக்கூடும்.
பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணம்;, சட்ட உதவி கிடைக்கின்றதா என்பதும் பாதிக்கப்பட்டோரை சமூக நீரோட்டத்துடன் மீண்டும் இணைப்பதற்கு தற்போதைய வழிமுறைகள் போதுமானதாக உள்ளதா என்பதும் கேள்விக்குறியாகவுள்ளன.

பால்நிலை சார்ந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை வழங்கும் இடங்களான பிரதேச செயலகங்கள், பொலிஸ் நிலையங்கள், வைத்தியசாலைகள் ஆகியவற்றில் நிவாரணம்; எந்தளவுக்கு கிடைக்கின்றது? அவை நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வாக இருக்கின்றதா என்றும் கண்டறியப்பட வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X