2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மந்த போஷனையுள்ள குடும்பங்களை திவிநெகுமத் திட்டத்தில் இணைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்தில் மந்த  போஷனையுள்ள 2,800 குடும்பங்களில்  1,400 குடும்பங்களை முதற்கட்டமாக திவிநெகுமத் திட்டத்தில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக கிராமியப் பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஏனைய குடும்பங்களை இரண்டாம் கட்டமாக திவிநெகுமத் திட்டத்தில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
 
கிரான் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது,

கிரான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.ரவிச்சந்திரன் பிரதேசத்தின் சுகாதார நிலைமை தொடர்பாக இக்கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

இங்கு பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 'எனது பார்வையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல அதிகாரிகள் அமைச்சிலிருந்து வரும் கட்டளைகளை மாத்திரம் நிறைவேற்றுபவர்களாகவே காணப்படுகின்றார்கள்.

இங்கு வேலை செய்பவர்களிடம் தேடல் இல்லை. வாங்கும் சம்பளத்துக்கு ஏற்ற வகையில் வேலை செய்ய வேண்டும். வேலை செய்யும் பிரதேசங்களில் என்னென்ன திட்டங்களை முன்னெடுப்பது என்பது தொடர்பில் துறைசார் ஊழியர்களிடம் திட்டங்கள் இருக்க வேண்டும்.
 
அமைச்சுகளில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்கான திட்ட அறிக்கை வருட இறுதியில் அனுப்பப்பட்டு, அவசரமாக திட்டங்கள் செய்து முடிக்கப்படுகின்றன' என்றார்.  

இந்தக் கூட்டத்துக்கு கல்வித் திணைக்களம், விவசாயத் திணைக்களம், கைத்தொழில் அதிகார சபை, நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை, சுற்றாடல் திணைக்ளம், மரமுந்திரிகை கூட்டுத்தாபனம், புகையிரதத் திணைக்களம், தொழிற்பயிற்சி அதிகார சபை ஆகியவற்றின் அதிகாரிகள் சமூகம் அளிக்காமைக்கான காரணத்தைக் கோரி கடிதம் அனுப்புமாறு பிரதேச செயலாளருக்கு பிரதி அமைச்சர்; பணித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X