2025 மே 02, வெள்ளிக்கிழமை

முன்னாள் முதலமைச்சரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

Editorial   / 2020 ஜூன் 22 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஸ்ரீலங்கா முஸ்லிம் கொங்கிரஸ் கட்சி சார்பில், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் அக்கட்சியின் பிரதித் தலைவருமான  நஸீர் அஹமட்டின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு, ஏறாவூரில் நேற்று (21) நடைபெற்றது.

அவரது முன்னாள் முதலமைச்சர் பணிமனையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சிப் பிரமுகர்கள், புதிதாக அவரது அணியில் இணைந்து கொண்டவர்கள், கட்சி ஆதரவாளர்கள், பிரமுகர்கள் உட்பட பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

அவரது விஞ்ஞாபனத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன, மத, பிரதேச வேறுபாடுகள் கடந்து செய்து முடிக்கப்பட வேண்டிய பல அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி சிலாகித்துக் கூறப்பட்டுள்ளன.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

“கடந்த கிழக்கு மாகாண சபை ஆட்சியின்போது, இறுதிக் காலகட்டத்தில் என்னால் திட்டமிடப்பட்டு அனுமதி பெறப்பட்ட சில அபிவிருத்தித் திட்டங்கள் தொடங்கப்படாமலும் ஏற்கெனவே தொடங்கப்பட்ட சில அபிவிருத்திப் பணிகள் முடிக்கப்படாமலும் இருந்ததை நீங்கள் அறிவீர்கள்.

“கிழக்கு மாகாணசபை கலைக்கப் பட்ட பின்னரான காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற  உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் இருந்தவர்களால் இத்திட்டங்கள் தொடரப்பட்டு முடிக்கப்படாமல் போனது துரதிஷ்டம் என்றே கருதுகின்றேன்.

“இந்நிலையில, நடைபெறப்போகின்ற நாடாளுமன்றத் தேர்தல் எமக்கான அரசியல் அதிகாரத்தை மீண்டும் வழங்க இருக்கின்றது. இவ்அதிகாரத்தை துரநோக்கு, சிறந்த திட்டமிடல், செயற்றிறன், நேர்மை, தெளிந்த அரசியல் சிந்தனைகளைக் கொண்ட ஆளுமையானவர்களுக்கு நீங்கள் வழங்கினால் இந்த மாவட்டம் இன மத பேதமின்றி அபிவிருத்தி காணும்.

“அந்தவகையில், கடந்த மாகாண சபை ஆட்சியில் எனது பணிகளை சாட்சியமாக வைத்து உங்கள் உங்கள் ஆதரவை வேண்டி நிற்கின்றேன்.

“சிறுபான்மைச் சமூகங்கள் சட்ட ரீதியாகவே ஒடுக்கப்படும் அவலநிலையும் எமது நிலபுலப் பிரதேசங்கள் பறிக்கப்படும் நிலையும் அபிவிருத்திப்பணிகளில் எமது மாவட்டங்கள் புறக்கணிக்கப்படும் நிலையும் ஏற்படுத்தப்படலாம்.

“இதற்கான  பேரினவாத சக்திகளின் நகர்வுகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டன என்பதை அண்மையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்காக அமைக்கப்பட்ட சிங்கள பேரினவாதிகளை மாத்திரம் கொண்ட வரலாற்றுத் தொல்பொருள் மரபுரிமை செயலணி போன்ற அமைப்புக்கள் எமக்கு புடம்போட்டுக் காட்டுகின்றன.

“எனவே, இக்காலப்பகுதிக்கான எமது நாடாளுமன்றத் தெரிவுகள் எமது உரிமைகளை விட்டுக் கொடுக்காத அதே நேரம் இன, மத, மொழி பேதமற்ற நல்லிணக்கத்துடன் கூடிய சாதுரியமான செயற்பாடுகளையும் கொண்ட ஆளுமைகளாக அமைய வேண்டும்.

“இவ்வாறான ஆளுமைமிக்க நேர்மையான ஆட்சியையே கடந்த கிழக்கு மாகாணசபை ஆட்சியில் நாம் வழங்கியிருந்தோம் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

“நான் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்திற்குச் சொந்தமான ஓர் அங்குல நிலத்தையோ, முதலமைச்சருக்குரிய அதிகாரத்தில் ஒரு துளியையோ வெளிச் சக்திகளுக்காக விட்டுக்கொடுக்கவில்லை என்பதை ஆணித்தரமாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .