2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மூன்றாண்டுச் செயற்றிட்டத்தை தயாரிக்குமாறு பணிப்பு

Suganthini Ratnam   / 2016 மே 12 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கல்வி வலயமாகக் கருதப்படும் மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்தில் கல்வி அபிவிருத்தியை மேற்கொள்ளும் நோக்கில்  மூன்றாண்டுச் செயற்றிட்டத்தை தயாரிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு வவுணதீவு பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பணித்துள்ளார்.

இந்த வருடத்துக்கான வவுணதீவுப் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோரின் தலைமையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இந்தப் பணிப்புரையை விடுத்தார்.

இதன்போது, மேற்படி வலயத்தின் கல்வி நிலை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு, அவ்வலயத்தின் முன்னேற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

மேற்படி வலயத்தில் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு 60 க்கும் மேற்பட்ட ஆசிரிய வெற்றிடங்கள் நிலவுகின்றது. இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும்போதே, கல்வி முன்னேற்றம் தொடர்பில் சிந்திக்க முடியும் என மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.சத்தியநாதன் தெரிவித்தார்.

இந்நிலையில், க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம் ஆகிய துறைகளில் தோற்றி மூன்று பாடங்களில் திறமைச் சித்திகளைப் பெற்றவர்களை ஆசிரிய உதவியாளர்களாக இணைப்பதன் மூலம் ஆசிரிய பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கூறினார்.

மேலும் இந்தக் கூட்டத்தில், வவுணதீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில்  அபிவிருத்திகளுக்காக இந்த ஆண்டு சுமார் 51 மில்லியன் ரூபாய்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

கிராம அபிவிருத்தி வேலைத்திட்டம், வீடுகள் புனரமைப்பு, குடிநீர் விநியோகத்திட்டம், சுகாதாரம், கல்வி ஆகிய திட்டங்களுக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்போது இந்த நிதியை பயன்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அதற்கான அனுமதிகளும் வழங்கப்பட்டன.
அத்துடன், 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அவற்றில் பூரணப்படுத்தப்படாத திட்டங்களை பூர்த்தி செய்யவும் பணிப்புரையும்; வழங்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், மா.நடராஜா, ஞா.கிருஸ்ணபிள்ளை, இரா.துரைரெட்னம் மற்றும் பிரதேச செயலாளர் எம்.சுதாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X