2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மூன்றாண்டு மீள்குடியேற்ற அபிவிருத்தித்திட்டம்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான மூன்றாண்டு மீள்குடியேற்ற அபிவிருத்தித்திட்டம் தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம், நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் மீளாய்வு செய்யும் வகையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், திட்ட ஆலோசகர் பி.சிவப்பிரகாசம், மீள்குடியேற்றப் பிரதேச செயலகப் பிரிவுகளின் பிரதேச செயலாளர்கள், துறைசார் திணைக்களங்களின் தலைவர்கள், மாவட்ட செலயக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் மீள்குடியேற்றப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதும் தேவையாகவும் உள்ள வீடமைப்பு, பொதுச் சுகாதாரம், குடிநீர் வழங்கல், வாழ்வாதாரங்கள், கிராமிய வீதி அபிவிருத்தி, சுகாதார மருத்துவ வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி உட்கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டன.

யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த காலத்துக்கும் மீளக்குடியமர்த்தப்பட்ட காலத்துக்கும் இடையில் உருவாகிய புதிய குடும்பங்களும் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவுறுத்தினார்.

அதேபோன்று, இம்மீள்குடியேற்றத் திட்டத்தில் உள்வாங்கப்படும் வாழ்வாதார மேம்பாட்டுத்திட்டங்கள் அதிகளவு வருமானத்தினைப் பெற்றுத் தரக்கூடிய திட்டங்களாக அமைந்திருப்பது சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
குடிநீர்ப்பற்றாக்குறை காணப்படுகின்ற பிரதேசங்களுக்கு தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் குடிநீர் விநியோகத்திட்டங்களை விஸ்தரித்தல் மற்றுமு; புதிய சாத்தியமான கிராமிய குடிநீர் வழங்கல் திட்டங்களை அமுல்படுத்துவதற்கும் ஆலோசிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் தங்கியிருந்தவர்கள், வன்னிப்பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்துக்குத் திரும்பியவர்கள், முன்னாள் போராளிகள், இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருந்து நாடு திரும்பியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் உள்வாங்கப்பட்டதாக அமைக்கப்படும் இத்திட்டம் விரைவில் முழுமைபடுத்தப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X