2025 மே 13, செவ்வாய்க்கிழமை

யுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள்

Editorial   / 2019 பெப்ரவரி 15 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன்

யுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வன பரிபாலனத் திணைக்களக் காணி தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படுமென, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (15) நடைபெற்ற காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் ஜனாதிபதி செயலணி சம்பந்தமான கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில், கிழக்கு மாகாணத்தில் மக்களுக்குத் தேவையான காணிகளை, வன பரிபாலன திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் ஆகியன, வர்த்தமானி பிரகடனம மூலம் கையகப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

அந்தப் பிரதேச மக்கள், கால் நடைகள் இறப்பு, இருப்பிடப் பிரச்சினை, மேய்ச்சல் தரைப் பிரச்சினை, மீள்குடியேற்றப் பிரச்சினை, விவசாயத்துக்கான காணிகள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

ஆகவே, இவைகள் தொடர்பில் உடனடியாக பிரதேச செயலக மட்டத்தில் அறிக்கைகளைப் பெற்று, மாவட்ட செயலகத்தின் சிபார்சுடன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட தேசிய செயலணிக்குச் சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேய்ச்சல்தரை விடயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் அடையாளங் காணப்பட்டுள்ள காணிகளை உடனடியாக வன பரிபாலன திணைக்களத்தினர் நேரடியான கள விஜயங்களை மேற்கொண்டு, ஒரு மாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

யுத்த காலங்களில் குடியேறிய மக்களுக்கு சலுகை காட்டப்படும். அவர்களுக்கான காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். அதற்குப் பின்னர்தான் ஏனைய தேவைகளுக்கு காணிகளைப் பயன்படுத்தும் வகையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X