2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

‘வட, கிழக்கு கல்வி நிலைமை முள்ளிவாய்க்காலுடன் தலைகீழானது’

எம்.எம்.அஹமட் அனாம்   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வி நிலைமை, தற்போது தலைகீழாக மாறியுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்தார்.

கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட வாழைச்சேனை நாசிவந்தீவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழா, அதிபர் ரீ.ஜெயப்பிரதீபன் தலைமையில், நேற்று (01) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கல்வியால் வளர்ந்த, அடையாளப்படுத்தப்பட்ட சமூகம், தமிழ்ச் சமூகம். இந்த நாட்டில் மூன்று தசாப்தத்துக்கு முன்பு வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல இலங்கையின் சகல பாகங்களிலும் கல்வித்துறையில், அரச நிர்வாக துறையில் மிகப் பெரிய பதவியில் இருந்தவர்கள், தமிழர்கள்.

“இந்த நிலைமை, தற்போது தலைகீழாக மாறியிருக்கின்றது. அண்மையில் வெளியாகியான உயர்தரப் பரீட்சையில் 9ஆவது இடத்தில் வட மாகாணமும், 8ஆவது இடத்தில் கிழக்கு மாகாணமும் காணப்பட்டன.

“சாதாரண தரப் பரீட்சையில் கிழக்கு மாகாணம் 9ஆவது இடத்தில் உள்ளது. இலங்கையிலுள்ள 98 கல்வி வலயங்களில், மட்டக்களப்பு மண்முனை மேற்கு வலயம், கல்வியில் 98ஆவது இடத்தில் உள்ளது.  

“யுத்த காலத்தில் பதுங்குக் குழிகளுக்குள் இருந்து, மண்ணெண்ணெய் விளக்கில் படித்த எங்களுக்குள் இருந்த கட்டுப்பாடு, ஒழுக்க விழுமியம், தமிழர் பண்பாடு, கல்வி ரீதியான முன்னேற்றம் எல்லாம், முள்ளிவாய்க்காலில் ஈழப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், தலைகீழாக மாறியுள்ளது.

“கிடைக்கப்பெற்ற சமாதானத்தைக் கண்மூடித்தனமாகப் பயன்படுத்துகின்ற சமூகமாக, வட, கிழக்கு தமிழ்ச் சமூகம் காணப்படுகின்றது. வீதியோரங்களில் நின்று கொண்டு காலத்தையும் நேரத்தையும் போக்குகின்ற அநேக இளைஞர்கள், பேஸ்புக்கில் தங்கள் வாழ்கையைத் தொலைக்கின்றதை நாம் பார்க்கின்றோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X