2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வரட்சி காரணமாக ஏறாவூரில் 16 பாடசாலைகளை ஒரு மணிநேரம் தாமதித்து ஆரம்பிக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
தற்போது நிலவுகின்ற வரட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பதுளை வீதியை அண்டியுள்ள 16 பாடசாலைகளை ஒரு மணிநேரம் தாமதமாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
 
வரட்சியான காலநிலை காரணமாக பதுளை வீதியை அண்டியுள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாணவர்கள் நேரத்துக்கு பாடசாலைக்குச் செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

இதனை அடுத்து, பதுளை வீதியை அண்டியுள்ள 16 பாடசாலைகளையும் ஒரு மணிநேரம் தாமதமாக ஆரம்பிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டதுடன், ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் கிராமியப் பொருளாதாரப் பிரதியமைச்சருமான  எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கூட்டத்தின் தீர்மானமாக இதை அறிவித்துள்ளார்.

இந்நிலையில், வழமையாக 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் மேற்படி 16 பாடசாலைகளும் 8.30 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானம் தொடர்பில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம், வலயக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன் மற்றும்   பாடசாலை அதிபர்களுக்கு உடனடியாக அறிவிக்குமாறும் ஏறாவூர்ப்பற்று மேற்குக் கோட்ட கல்வி அதிகாரி எஸ்.முருகேசுப்பிள்ளைக்கு அவர் பணித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X