2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வவுணதீவில் 15,303 ஏக்கரில் பெரும்போகம்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவில் இம்முறை சுமார் 15,303 ஏக்கரில் பெரும்போகச் செய்கை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உன்னிச்சைக்குள நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் வலதுகரை, இடதுகரை மற்றும் ஆற்றுப் பாசனம் ஆகிய நெற்செய்கைக் கண்டங்களில் பெரும்போகச் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

மட்டக்களப்பு, வவுணதீவுப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பெரும்போகச் செய்கைக்கான கூட்டம், பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (03) மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிலையில் விதைப்பு வேலை, இம்மாதம் 10ஆம் திகதி முதல்; எதிர்வரும் 05ஆம் திகதிவரை மேற்கொள்வதற்கும் ஆரம்ப நீர் விநியோகம் எதிர்வரும் 25ஆம் திகதி எனவும்;; இறுதி நீர் விநியோகம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05ஆம் திகதி எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விவசாயிகள் தங்களின் செய்கைக்காக காப்புறுதி செய்யவேண்டிய இறுதித் திகதி எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதியாகும். மேலும்,  விவசாயச் செய்கைக்கு வழிவிடும் வகையில் கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களின் கால்நடைகளை விதைப்பு வேலை ஆரம்பிப்பதற்கு  முன்னர் அங்கிருந்து கொண்டுசெல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு வாக்களிக்கப்பட்ட தேவைகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் தவறியுள்ளதால்,  மேற்படி கூட்டம், விவசாயிகளை ஏமாற்றத்தில்; தள்ளியுள்ளதாக உன்னிச்சைக்குளம் நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவக் குழுத் தலைவர் கே.யோகவேள் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தின்போது, விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறியுள்ளதால், விவசாயிகள் கண்டனத்தையும் கவலையையும் வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது ஒருபுறமிருக்க இப்பிரதேசத்தில் விளைவிக்கப்படும் நெல்லை, நெல் சந்தைப்படுத்தும் சபை மூலமாக விற்பனை செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளமையானது விவசாயிகளைப் பாதிக்கும் எனத் தெரிவித்த அவர்,  கடந்த சிறுபோகத்தின்போது இப்பகுதியில் விளைவிக்கப்பட்ட நெல்லை நெல் சந்தைப்படுத்தும் சபை மூலமாகக் கொள்வனவு செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்யவில்லை. இதன் காரணமாக உத்தரவாதமற்ற விலையில் தனியார் வியாபாரிகளுக்கே நெல்லை விற்க வேண்டியிருந்தது எனக்; கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X