2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வாகரையில் துரிதகதியில் மீள்குடியேற்றம்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்,வடிவேல் சக்திவேல் 

மட்டக்களப்பு, வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட எலவட்டமடு, மாங்கேணி தெற்கு, மேவாண்டகுளம், பனிச்சங்கேணி, புதிய நகரம் ஆகிய கிராமங்களில் மக்களைத் துரிதகதியில் மீள்குடியேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் மீள்குடியேற்றப் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல், அப்பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (03) மாலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  

இக்கலந்துரையாடலில் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி சாந்தி நாவுக்கரசு, வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த மீள்குடியேற்றத்துக்குத் தேவையான நிதியை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு வழங்கும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மீள்குடியேற்றுவதற்காக 47 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. மேலும், தெரிவு செய்யப்படும் குடும்பங்களும் எதிர்வரும் டிசெம்பர் மாதத்துக்கு முன்னர் தற்காலிகமாக மீள்குடியேற்றப்படவுள்ளனர். இவ்வாறு மீள்குடியேற்றப்படவுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் உணவு, மலசலகூடம் உள்ளிட்ட தேவை கருதி 75 ஆயிரம் ரூபாய் படி வழங்கப்படவுள்ளது.

இதன் பின்னர், அடுத்த வருட ஆரம்பத்தில் குறித்த கிராமங்களில் நிரந்தரமாக மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இக்கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றப்படவுள்ள மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் வீடுகளைத் திருத்துவதற்கான நிதி வசதியை ஏற்படுத்தித் தருமாறு வாகரைப் பிரதேச செயலாளர் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர்,  வீடுகளுக்கான திருத்த வேலைக்காக குடும்பம் ஒன்றுக்கு 2 இலட்சம் முதல் 3 இலட்சம் ரூபாய்வரை நிதி ஒதுக்கீடு செய்வதாகத் தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் 17ஆம் திகதி காணி ஏலம் நடத்தப்படவுள்ளது. இதன்போது, காணி வசதி இல்லாத  மக்களுக்கு காணிகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்பதுடன், மீள்குடியேற வேண்டிய மக்களும் இனங்காணப்படவுள்ளதாகக் இக்கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X