2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'அதிகாரங்களுக்காக எனது சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்கவில்லை'

Niroshini   / 2015 நவம்பர் 18 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

என்னை அரசியலில் அடிமைப்படுத்தி எனது கௌரவத்தை இழக்கச் செய்ய சிலர் முயற்சித்தனர். ஆனால், நான் அரசியல் அதிகாரங்களுக்காக எனது சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்கவில்லை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

ஏறாவூர் அல்அமான் வித்தியாலயத்தில் தனது நிதியொதுக்கீட்டின் கீழ் தளபாடங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் யு.எல்.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர்,

அரசியல் அதிகாரங்களுக்காக சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்க முடியாது.

எனது அரசியல் வாழ்வில் என்னை சில அரசியல்வாதிகள் அடிமைப்படுத்தி எனது கௌரவத்தை இழக்கச் செய்ய முயற்சித்தனர். ஆனால், நான் அரசியல் அதிகாரங்களுக்காக எனது சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்கவில்லை.

அதிகாரத்தை வைத்து யாரையும் அடிமைப்படுத்த முயற்சிக்க கூடாது. சுய கௌரவத்தை இழந்து அரசியல் செய்ய முடியாது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர் கல்விக் கோட்டத்திலுள்ள மிகவும் வறுமையான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையாக இந்தப்பாடசாலை உள்ளது.

வறுமையில் கல்வி கற்பதென்பது உயர்ந்த அந்தஸ்த்துக்கும் உயர் பதவிகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை மறந்து விடக்கூடாது.

எங்கு வறுமை அதிகம் இருக்கின்றதோ அங்குதான் சாதனையாளர்களாகவும் புத்திஜீவிகளாகவும் வருவார்கள்.
எனது அனுபவத்தில் நான் சந்தித்த புத்திஜீவிகள் மற்றும் கல்விமான்கள், சாதனையாளர்கள் எல்லாம் வறுமைக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்.

வறுமையைக் காரணம் காட்டி ஒரு போதும் கல்வியை இடை நடுவில் விட்டு விடக் கூடாது. அதே போன்று பாடசாலையை விட்டு இடைவிலகி விடக்கூடாது.

தொடர்ந்து கல்வி கற்று முன்னேற வேண்டும். முன்னைய காலங்களை விட இப்போதும் கல்விக்கு அரசாங்கம் உட்பட பலரும் உதவி செய்கின்றனர்.

இருக்கின்ற வளத்தினை வைத்து கல்வியை மேம்படுத்த வேண்டும். கடந்த காலங்களை விட இன்று மட்டக்களப்பு மாவட்டம் கல்வியில் படிப்படியாக முன்னேறி வருகின்றது.

தற்போதுள்ள அதிகாரிகள் முன்னைய அதிகாரிகளிடம் ஆலோசனைகளைப் பெற்று அவர்களின் ஒத்துழைப்புடன் கல்வி அடைவு மட்டத்தை முன்னேற்ற வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X