2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் பிரதேசங்களில் இரண்டாம் நிலையில் மண்முனைப்பற்று பிரதேசம் இருக்கின்றது. இந்த நிலையை மாற்றுவதற்கு அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,மண்முனைப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட கிரான்குளம் சரவணா சைவ மன்றத்தின் நான்காவது ஆண்டு நிறைவு விழாவும் சாதனையாளர் பாராட்டு விழாவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சரவணா சைவ மன்றத்தின் தலைவர் மு.ரவிந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிரான்குளம் விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ செ.சுப்ரமணிய சர்மா,போரதீவுப்பற்று உதவி பிரதேச செயலாளர் சி.புவனேந்திரன்,மண்முனைப்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி நே.தங்கவடிவேல்,விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் விரிவுரையாளர் க.மோகனதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு சாதனைகளை படைத்த 26பேர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அவர் மேலும் கூறுகையில்,

சாதனை என்பது ஒரு மனிதனின் வாழ்வில் மறக்கமுடியாத அம்சமாகும். அதனைக் கௌரவப்படுத்த வேண்டியது அப்பிரதேச மக்களின் கைகளில் உள்ளது.

மண்முனைப்பற்று பிரதேசத்தில் கடந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் தொகையை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது.

இன்று பல மாணவர்கள் கல்வியை சரியான முறையில் பூர்த்திசெய்யாமல் கூலிவேலைகளுக்காக அலைந்து திரியும் நிலையை நாங்கள் தினமும் காணமுடிகின்றது.

அத்துடன், மண்முனைப்பற்று பிரதேசமானது பெண்களை பணிப்பெண்களாக வெளிநாட்டுக்கு அனுப்புவதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது நிலையில் உள்ளது.

சனத்தொகை அடிப்படையில் நடுநிலையில் இருக்கும் மண்முனைப்பற்று பிரதேசம் பெண்களை வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக அனுப்புவதில் இரண்டாவது நிலையில் இருப்பதான கவலைக்குரிய விடயமாக பார்க்கவேண்டும்.

இவ்வாறு வெளிநாட்டு பெண்கள் வேலைக்கு செல்வதன் காரணமாக அதனால் ஏற்படும் தாக்கங்களை நாங்கள் அவதானிக்க வேண்டும்.

இதன்காரணமாக, பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லும் வீதம் குறைகின்றது. தொடர்ச்சியாக பாடசாலைக்கு செல்வதில்லை.இடைவிலகள் அதிகமாக இருக்கின்றது.

பிள்ளைகளின் பாதுகாப்பு குறைவாக இருக்கின்றது.துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கூடிய நிலைமை அதிகமாக இருக்கின்றது.தாயின் அன்பைபெறும் வாய்ப்பினை இழந்து விடுகின்றனர்.

கல்வியில் பிள்ளைகளின் முன்னேற்றத்தின் பெரும் பங்கை வகிக்கும் தாய்,தந்தையர்கள் அந்த குழந்தைகளின் அருகில் இல்லாவிட்டால் அதன் நிலைமை என்னவாகும் என்பதை சிந்திக்க வேண்டும்.

இந்த நிலைமையை மாற்ற வேண்டும்.இந்த நிலைமையை மாற்றுவதற்கு சமூகம் என்ன செய்ய வேண்டும் என்பதே மிகவும் முக்கியமானதாகும்.

இந்த கிரான்குளம் பிரதேசத்தில் உள்ள குறைபாடுகளையும் நான் சுட்டிக்காட்ட வேண்டும்.

ஆலயங்கள் ஆன்மாக்கள் லயப்படும் இடமாக இந்துமதத்தில் கொள்ளப்படுகின்றது. மக்களின் தேவைகளுக்காகவே ஆலயங்கள் இருக்கின்றன.அந்த ஆலயங்களுக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும்.

இப்பகுதியில் உள்ள ஆலயங்கள் குல பேதங்களுக்கு அப்பால் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து பணியாற்றும் ஆலயங்களாக மிளிரவேண்டும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X