2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'அரசாங்கத் தொழிலுக்காக எதிர்பார்க்கின்றமையானது கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தாமை ஆகும்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

'யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இளைஞர், யுவதிகள் சுயதொழிலில் ஈடுபடாமல் அரசாங்கத் தொழிலுக்காக எதிர்பார்க்கின்றமையானது தங்களுக்குக் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தாமை ஆகும். இதன் காரணமாக பொருளாதார ரீதியில் முன்னேறாமல், இம்மாவட்டம் வறுமையில் முன்னிலையில் உள்ளது' எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

'தமிழர்கள் நிவாரணம் பெறுவதில் முதன்மையாக உள்ளனர். நாங்கள் கையேந்தும் சமூகமாக தொடர்ந்தும் இருக்கக்கூடாது' எனவும் அவர் கூறினார்.

பிரதேச இளைஞர் முகாம், வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன் இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (23) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'தற்போதைய சூழ்நிலையில் எமது இளைஞர் சமூகம் பின்னடைவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. பெரும்பாலான பாடசாலை மாணவர்கள் மதுபானம் மற்றும்; சிக்ரெட் பாவனைக்கு அடிமையாகின்றனர். மதுபானப் பாவனையில் எமது மாவட்டம்; முன்னிலையில் உள்ளது. இம்மாவட்டத்தில் 20 மதுபானச்சாலைகள் இருக்கவேண்டிய நிலையில், 69 மதுபானச்சாலைகள் உள்ளன' என்றார்.  

'மேலும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது  துப்பாக்கிப் பிரயோகம் செய்த பொலிஸாருக்குத் தண்டனை வழங்குவதன் மூலம் இந்த நாட்டிலுள்ள  தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கிறது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

நாட்டில் தற்போது யுத்தம் இல்லை. எவரும் எங்கேயும் சென்றுவரலாம். நல்லாட்சி நடைபெறுகின்றது என்ற நிலை காணப்படும்போது சிவில் நிர்வாகத்தைக் கொண்டுநடத்தும் பொலிஸார், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை சுட்டுக்கொன்றுள்ளனர். இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
 
உயிரைப் பறிப்பதற்கு எவருக்கும் அனுமதி இல்லை. சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டிய பொலிஸார், மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இதற்குக் காரணம் கூறி தப்பித்துவிடக்கூடாது.
 
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து 05 பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவேண்டிய காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்பதுடன், இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது. தொடர்ந்து எங்களது மக்கள் கொல்லப்படுவதை அனுமதிக்க முயாது' எனவும் அவர் கூறினார்.
 
 
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X