2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'அரசியல் கட்சியாக த.ம.பே. மாறக்கூடாதென்ற நிபந்தனையுடன் இணைந்தேன்'

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா,கே..எல்.ரி.யுதாஜித்

தமிழ் மக்கள் பேரவையானது எக்காலத்திலும் அரசியல் கட்சியாக மாற்றம் பெறக்கூடாது என்ற நிபந்தனையுடனையே அப்பேரவையில் தான் இணைந்ததாக வடமாகாண முதலமைச்சரும் பேரவையின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையினுடைய முத்தமிழ் விழாவின் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'அரசியல் தலைமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் திருத்தச் சட்டமூலங்களில் தமிழர்களின் வருங்கால நிரந்தர இருப்பை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் பரிந்துரைகளை மேற்கொள்வதற்கும் தமிழ் மக்கள் சார்ந்த இன்னோரன்ன விடயங்களில் அவர்களுக்கு பக்கபலமாக நின்று உதவுவதற்கும் ஏற்றதொரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று அறிஞர்களும் அரசியல் தலைமைகளும், சமூக ஆர்வலர்களும் கேட்டுக்கொண்டமைக்கு அமைய தமிழ் மக்கள் பேரவை  உருவாக்கப்பட்டது.

நோக்கம் நன்றாக இருந்ததுடன், பேரவையின் முயற்சிகளில் தெளிவு காணப்பட்டது. இப்புதிய முயற்சி தமிழ் மக்களின் விடிவுப்பாதைக்கான  உந்துசக்தியாக அமையும் என்ற காரணத்தால் நானும் அந்த அமைப்புக்கு அனுசரணை வழங்குவதற்கு நிபந்தனையுடன் முன்வந்தேன்.

தமிழ் மக்கள் பேரவை எக்காலத்திலும் அரசியல் கட்சியாக மாற்றம் பெறக்கூடாது என்ற நிபந்தனையுடன் பேரவையில் இணைந்தேன்' என்றார்.

'அரசியல் தலைமைகளும் வெகுவாக விமர்சிக்க ஆரம்பித்தார்கள். தமிழ் மக்கள் பேரவையானது  மக்கள் அமைப்பேயன்றி, அது அரசியல் கட்சியல்ல என்று நாம் மீண்டும் மீண்டும் தெரியப்படுத்தினோம். நீங்கள் அரசியல் கட்சியாக மிளிரப் போகின்றீர்கள் என்பதுடன்,  அதற்கான முன்னாயத்த வேலையே இது என்று கூறுகின்றார்கள். ஆனால், அவர்களின் சந்தேகத்துக்காக நாம் செய்யும் நல்ல காரியங்களை இடைநிறுத்த முடியாது. நாம் எமது கடமையை செய்கின்றோம்' என்றார்.
'எமது கலை, கலாசாரம், இலக்கியம் அனைத்துக்கும் அடிநாதமாக விளங்குவது எமது மொழியாகும். மொழியில்லையேல் கலையில்லை. கலாசாரமில்லை. இலக்கியமில்லை. எமது பாரம்பரியத்துக்கான வடிவம் மொழியே.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சமரசத்துக்;கும் சமஷ்டிக்கும் தமிழ்மொழி மூலமான ஒருமைப்பாடு வழிவகுக்கட்டும்.
ஊடகங்களில் ஊடாக கேட்கப்படும் ஆங்கிலம் கலந்த தமிழை செவிமடுத்துவிட்டு சென்னையில் இன்னும் 25 வருடங்களில் தமிழிஷ் என்னும் புதுமொழி உருவாகும் என்கின்றார்கள் மொழி வல்லுநர்கள்.

மொழி வெறும் தொடர்பாடல் ஊடகம் மட்டுமல்லாது,  எமது பாரம்பரியத்தின் பிரதிபலிப்பு. பிறமொழிப் புலமை மாணவர்களை வளர்ச்சி நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், தாய்மொழியில் தேர்ச்சி இன்றி பிறமொழியில் தேடல் என்பது முழுமை பெறதா தேடலாகவே கருதப்படும். தன்னை அறிந்தே பிறரை அறியமுற்பட வேண்டும். தன் மொழி அறிந்தே, பிறமொழி பாண்டித்தியம் பெறவேண்டும். இல்லையென்றால் நாங்கள் கலப்பினக் கடையர்கள் ஆகிவிடும் நிலையேற்படும்.

மொழிப் பரம்பல், மொழி ஆட்சி, மொழிப் பிரயோகங்களை முன்னோக்கி எடுத்துச் செல்கின்ற பொறுப்பு கல்லூரிகளினதும் பல்கலைக்கழகங்களினதும் ஊடகங்களினதும் தலைமைகளை சார்ந்ததாக காணப்படுகின்றது.
ஊடகங்களில் மொழிச்செம்மையை பேணவேண்டியமை கட்டாயப்படுத்தவும் நடைமுறைப்படுத்தவும் முன்வரவேண்டும்' எனவும் அவர் கூறினார்.  

'நான் எனது நீதித்துறை பயணத்தில் இந்த மட்டக்களப்பு மண்ணில்தான் காலடி பதித்தது. 1978ஆம் ஆண்டு இடம்பெற்ற சூறாவளியின் காரணமாக வெள்ளையர் காலத்தில் மெனிங்ரைவ் வீதியிருந்த எமது உத்தியோகபூர்வ வாசஸ்தளம் மிகவும் பாதிப்படைந்து காணப்பட்டது. பயன்பாட்டுக்கு தகுதியற்றது என்றிருந்த அந்த பழைய கட்டடத்தை அரசாங்க திணைக்களத்தின் உதவியுடன் புனரமைப்பு செய்து வைத்தேன்.

அன்று சிறையில் சுமார் இரண்டு வருடங்கள் மறியலில் இருந்த மாவை சேனாதிராஜா, காசியானந்தன் போன்றோருக்கு நான் பிணையளித்ததன் காரணமாக உடனேயே சாவகச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டேன். ஏழு மாதங்களே என்னை மட்டக்களப்பில் இருக்க விட்டார்கள்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X