2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் நிலை மாற வேண்டும்'

Sudharshini   / 2016 மே 03 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா,வடிவேல் சக்திவேல்

ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் நிலைகள் அகற்றப்பட்டு ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தமது செயற்பாடுகளை மேற்கொள்ளும் நிலையினை அரசாங்கம் ஏற்படுத்தவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இன்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இன்று உலகெங்கும் ஊடக சுதந்திரம் அனுஸ்டிக்கப்படுகின்றது. குரலற்ற மக்களுக்கான குரலாக ஊடகவியலாளர்கள் செயற்பட்டுவருகின்றனர். கடந்த காலங்களில் இலங்கையில் ஊடகவியலாளர்கள் குரலற்ற மக்களுக்கு குரலாக செயற்பட்டுவந்தனர். இதன் காரணமாக பல ஊடகவியலாளர்கள் தங்களது உயிரை இழக்கும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு செல்லும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு தரப்பினராலும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்களுக்குட்படுத்தப்பட்டு வந்தனர். படுகொலையும் செய்யப்பட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் கொள்ளப்பட்ட அச்சுறுத்தப்பட்ட ஊடவியலாளர்களுக்கு இதுவரையில் எந்த நீதி நியாயமும் கிடைக்கவில்லை. கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன' என குறிப்பிடப்பட்டிருந்தது.

'இந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளை கைதுசெய்து இந்த நாட்டில் ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிக்கொணரவேண்டும்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்டு வருவதை அவதானிக்கமுடிகின்றது. சுதந்திரமாக தமது கருத்துகளை வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் நிலைகள் அகற்றப்பட்டு ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தமது செயற்பாடுகளை மேற்கொள்ளும் நிலையினை இந்த நாளில் ஏற்படுத்த அரசாங்கம் முன்வரவேண்டும்" என அவ்வறிக்கையல் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X