2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'எமது உரிமைகளைக் கேட்டதால் அதிகளவான கஷ்டங்களுக்கு நாம் முகங்கொடுக்க நேரிட்டது'

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 09 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

 'எமது உரிமைகளைக் கேட்டதன் காரணமாக  அதிகளவான கஷ்டங்களுக்கு நாம்  முகங்;கொடுக்க நேரிட்டது. இந்த 30 வருட காலத்துக்குள்; மிகவும்  துன்பத்தை அனுபவித்து விட்டோம்' எனக் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

'இதேவேளை, இந்த 30 வருட காலத்துக்குள் எமது சகோதரர்கள் வளர்ந்து விட்டார்கள்' எனவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாண மீன்பிடி அமைச்சின் ஒதுக்கீட்டின் கீழ் நாவற்குடா வாவி மீனவர் கூட்டுறவுச் சங்கத்துக்கு  மீன்பிடி உபகரணங்களை வழங்கும் நிகழ்வு அங்கு சனிக்கிழமை (8) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,'யுத்தம் முடிந்ததும், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அபிவிருத்திகளுக்காக உலக நாடுகள் அதிகளவான நிதி வழங்கியது. ஆனால், அந்த நிதியை அப்போதைய அரசாங்கம் அந்த நோக்கத்துக்காகப் பயன்படுத்தாமல், வேறு வகையில் பயன்படுத்தியது.

மேலும், எங்களுக்குரிய நிதி ஒதுக்கீடு மிகக் குறைவு. இது தொடர்பில்  மத்திய அரசாங்கத்துக்கு நாம் தெரியப்படுத்தியுள்ளதுடன், மத்திய அமைச்சருடனும் ஓர் இணக்கப்பாட்டுடன் இருக்கின்றோம். மத்திய அமைச்சின் மூலம் பெறக்கூடிய பலாபலன்களைப் பெற்று எமது மக்களுக்கு உதவி செய்வோம். எமக்கு இருக்கின்ற வாய்ப்புகளைப்; பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்' என்றார்.

'தமிழர்களை விட்டு, ஆட்சி அமைக்க முடியாது என்;ற யோசனையை மற்றவர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய வகையில் எமது மக்களின் செயற்பாடு காணப்படுமாயின், நிச்சயமாக கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுடன் சேர்ந்தே  வாழ வேண்டும் என்ற  நிலைமையை ஏற்படுத்தலாம். அதன் மூலம் எம்மால் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முடியும்.

எமக்கு சமஷ்டி கிடைத்திருந்தால், முஸ்லிம்கள் எம்மை விட்டுப் பிரிந்திருக்க மாட்டார்கள். ஏனெனில், அதிகாரம்  கிடைக்கும்போது, அவர்கள் எங்களுடன்  கட்டாயம் நிற்பார்கள். எனவே, இனிமேல் ஏற்படுத்தப்படும்  அரசியலமைப்பு விடயங்களில் எமக்கு அதிகாரத்தைப் பெறும் நிலைமை வரும்போது, முஸ்லிம் சகோதரர்களும் எங்களுடன் சேர்ந்திருந்து தங்களுடைய விடயங்களைக் கையாள்வதற்கு முயற்சிப்பார்கள். அவ்வாறு சேர்ந்து ஓர் இணக்கப்பாடு ஏற்படும்போது, இவ்வாறான வன்மம் எல்லாம் போய்விடும்' என்றார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .