2025 மே 12, திங்கட்கிழமை

'ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்த கருத்து தெளிவுப்படுத்தப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்த கருத்துத் தொடர்பில் அவர் நாடு சென்ற பின் தெளிவுபடுத்த வேண்டுமென தமிழரசுக் கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு கல்லடி, உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'கிழக்கு மாகாணத்துக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் விஜயம் செய்தபோது அவரைச் சந்தித்து, இலங்கை அரசாங்கமும் இணைந்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்தவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினோம்.

இராணுவத்தினரைச் சுருக்க வேண்டும், காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறைக்கைதிகள் தொடர்பில் மும்முரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் ஆணையாளர் கூறியுள்ளார்.

எனினும், வடமாகாண முதலமைச்சரை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சந்தித்தபோது வெளியிட்ட கருத்து கவலையளிப்பதாக உள்ளது. சிறைக்கைதிகள் விசாரணையின் பின்னர்; விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதே சர்வதேசத்தின் கருத்தென ஆணையாளர் கூறியுள்ளார். சாதாரண சட்டத்தின் கீழ் அரசியல் கைதிகள் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தால், அவரது கூற்றை ஓரளவுக்கு ஏற்கமுடியும்.

இங்குள்ள அரசியல் கைதிகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டவர்கள். அப்பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென்று ஐ.நா.வில் முன்மொழியப்பட்டுள்ளது. எந்தச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் தீர்மானம் எடுத்திருக்கின்றதோ, அச்சட்டத்தினால் கைதுசெய்யப்பட்டவர்களை சட்டத்தின் பிரகாரம் விசாரித்தே விடுவிக்க வேண்டுமென ஆணையாளர் கூறியிருந்தால், அவரின் கருத்து மயக்க நிலையிலுள்ளது. அதனை அவர் நாடு திரும்பிய பின்னராவது தெளிவுபடுத்த வேண்டுமென்பதே எங்களின் கோரிக்கையாகும்' என்றார்.

'மேலும், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அத்திபாரம் இடப்பட்டுள்ளது. இன்னும் அப்பிரேரணை முழுமையாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை. ஆனால், முன்மொழியப்பட்டுள்ளது. எங்களின் தலைவிதி எழுதப்படப்; போகின்ற விடயம் மாணவர்களுக்கு தெரிந்திருக்கவேண்டும்' ஒற்றையாட்சி என்றால் தமிழர்களுக்கு கோபம் வருகின்றது. சமஷ்டி என்றால் பெரும்பான்மையினருக்கு  கோபம் வருகின்றது. இந்த இரண்டுக்கும் மத்தியில் மிகப்பக்குவமாக விடயங்களை கையாண்டு வரையப்படும் அரசியல் சாசனத்தில் எங்களின் உரிமைகளை மிக உறுதியாக எழுதவேண்டும். அதற்காக எல்லோரும் செயற்படவேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X