Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எம்.அஹமட் அனாம்
சிறுபான்மை இனங்களுக்குள்ளேயே ஒரு சமூகம் அடுத்த சமூகத்தை அடக்கியாள முயற்சிக்கக் கூடாது என்பதுடன், தமிழ் பேசும் சமூகம் தங்களுக்குள் சகோதர வாஞ்சையுடன் வாழப் பழகவேண்டும் என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
பேரினவாதத்தை முறியடிப்பதற்காக தமிழரும் முஸ்லிமும் இணையவேண்டும் எனவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு, மீராவோடை சக்தி வித்தியாலயத்தின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவும் பரிசளிப்பு விழாவும் விருட்சம் சஞ்சிகை வெளியீடும் அவ்வித்தியாலயத்தில் திங்கட்கிழமை (03) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'நல்லாட்சி அரசாங்கத்தில் எமது கனவு ஓரளவு நனவாகியுள்ளதுடன், முன்னோக்கிய நகர்வும் உள்ளது. இது ஸ்தம்பிக்கவில்லை. அதுவே நல்ல விடயமாகத் தெரிகின்றது.
நாங்கள் அனைவரும் சேர்ந்து நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்தியுள்ளோம். இந்நிலையில், மூவின மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, அனைவருக்கும் நியாயத்தை பெற்றுத்தரக்கூடிய, தீர்வை பெற்றுத்தரக்கூடியதான யோசனை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நல்லாட்சி நல்லதை நோக்கி நகரவில்லை என்றால், எனக்கு இதில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டிய தேவைப்பாடு இல்லை.
கொள்கை என்பது உயிரோடும் உணர்வோடும் கலந்திருக்கவேண்டும். எமது இனத்தின், மொழியின், கலை கலாசாரத்தின் கொள்கைப் பற்றோடு நாங்கள் உள்ளோம். அதேவேளை, சகோதர இனங்களையும் அரவணைத்து, அவர்களுக்காகவும் குரல் கொடுப்போம்.
முஸ்லிம் சமூகத்துக்கு விளங்கும்படியாக நான் இதனை உரத்துக் கூறுகின்றேன். அன்றும் இன்றும் நான் தமிழர்கள், முஸ்லிம்கள் என்று மட்டும் போராடவில்லை. அடக்கி ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையினச் சகோதரர்களுக்காகவும் குரல் கொடுத்து வருகின்றேன்' என்றார்.
'மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர், முஸ்லிம்களுக்கு இடையில் காணப்படும் எல்லைப் பிரச்சினையை இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், கண்ணியமாகக் கையாண்டு தீர்க்குமாறு அறைகூவல் விடுக்கின்றேன்.
இனிமேலும் எல்லைப் பிரச்சினை காரணமாக யுத்தம், அடிப்படைவாதம், மதவாதம், பிரிவினைவாதம் என்று எதுவும் வேண்டாம். சகோதரர்களாக வாழக் கற்றுக்கொள்வோம். அதற்கு மற்றவர்களை சமத்துவமாக நடத்தும் பண்பு தேவை' என்றார்.
'தற்போதைய அரசாங்கத்தில் இணைந்துகொண்டு அமைச்சுப் பதவியைப் பெறுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நான் அழைக்கவில்லை. ஆனால், காலம் நிச்சயமாக மாறும்போது, கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அமைச்சர்களாக அமரும் காலம் வரும். காலங்காலமாக நாங்கள் ஆளப்படுபவர்களாக மாத்திரம் இருந்துவிட்டுப் போய்விட முடியாது' எனவும் அவர் கூறினார்.



24 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
7 hours ago