2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'ஒளடதங்களை போதைப்பொருளாகப் பாவிப்பது ஆபத்தானது'

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 07 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

போதைப்பொருள் பாவனைக்கெதிரான பலமுனைப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்திருப்பதால் போதைப் பிரியர்கள் இப்பொழுது ஒளடதங்களை போதைக்குப் பாவிக்கத் தொடங்கியுள்ளார்கள். இது ஆபத்தானது என வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறாவூர் நகரில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள செப்டெம்பர் மாதம் போதையற்ற நகரம் எனும் செயற்றிட்டம் பற்றி அவர்  நேற்றுப் புதன்கிழமை கருத்துத் தெரிவித்தார்.

இது விடயமாக மேலும் அவர் கூறுகையில், 'போதைப் பொருள் பாவனை என்பது பல்வேறு வகையாக இடம்பெறுகின்றது. சமீப காலங்களுக்கு முன்னர் போதைக்காக இளைஞர் கூட்டமும் மற்றும் பாரம்பரிய மதுப் பிரியர்களும் திரவ ரீதியான சாராயம், பியர், கள்ளு, வடிசாராயம் போன்றவற்றை பாவித்து வந்தனர். ஆனால், திரவ ரீதியான போதைப் பொருள் பாவனை இப்பொழுது மாறியிருக்கின்றது. போதைப் பொருள் பாவனைக்கெதிரான சட்ட மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளின் பயனாக போதைப் பிரியர்கள் இப்பொழுது சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவதற்காக மருந்து மாத்திரைகளை  அளவுக்கதிகமாகப் பாவித்து அதில் போதையை அனுபவிக்கின்றார்கள். இது ஆபத்தானது.
எவ்வாறாயினும், எதிர்கால இளைய சமுதாயம் எந்தவகையான போதைப் பாவனைக்கும் அடிமையாகி விடக் கூடாது என்பதில் சுகாதாரத்துறை அக்கறையாகவும் விழிப்பாகவும் இருந்து செயற்பட்டு வருகின்றது.

ஆயினும், போதைப் பாவனை என்பது இளைஞர் சமூகத்தின் மத்தியில் கடும் வேகத்தில் ஊடுருவுகின்றது என்பது கவலையளிப்பதாய் உள்ளது.

போதைப் பொருள் பாவனை, விற்பனை, மற்றும் ஒழிப்பு விடயத்தில் ஒட்டு மொத்த சமூகமுமே இணைந்து செயற்பட வேண்டும்.

குறிப்பாக பாடசாலைச் சமூகம், வர்த்தக சமூகம் மற்றும் பொதுநல அமைப்புக்கள் மத அமைப்புக்கள் இணைந்து இறுக்கமாகச் செயற்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக பெற்றோர், பொதுமக்கள் ஆகியோர் முன்வந்து உதவ வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X