Suganthini Ratnam / 2016 ஜூன் 26 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
கல்குடாத்தொகுதியில் உள்ள முஸ்லிம்; காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒரு தலைமையின் கீழ் ஒற்றுமையுடன் இருக்கின்றார்கள். இந்த ஒற்றுமையை சிதைத்து தனிப்பட்ட அரசியல் செய்ய எவராவது முனைவார்களாக இருந்தால் அவர்களை மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் எச்.எம்.எம்.றியால் தெரிவித்தார்.
வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பதுரியா பள்ளிவாசலில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'இன்று கல்குடாத்தொகுதி முஸ்லிம் பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுவதுடன், ஆதரவாளர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் கட்சியை வளர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்திலும் செயற்பட்டு வருகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் தனிப்பட்ட அரசியல் செய்து கட்சி ஆதரவாளர்களின் ஒற்றுமையை சீர்குலைத்து தனிப்பட்ட செல்வாக்கை செலுத்த எவராவது முற்படுவார்களாக இருந்தால் தேர்தலில் மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் கல்குடாத் தொகுதிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் கட்சி ஆதரவாளர்களின் ஆதங்கம் எனக்கு நன்கு தெரியும். என்னை விட எமது தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கல்குடாவுக்கு தேசியப்பட்டியல் வழங்க வேண்டும் என்ற எண்ணம்; அதிகம் உள்ளது. துரதிஷ்டவசமாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருகோணமலையிலும் வன்னியிலும் தமது ஆசனங்களை கட்சி இழந்ததால் ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த தேர்தலின்போது எச்சந்தர்ப்பத்திலும் நான் தேர்தலில் தோல்வியடைந்தால் எனக்கு தேசியப்பட்டியல் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. அதை எதிர்பார்த்து தேர்தலுக்கு வரவும் இல்லை. ஆனால், தலைவரும் விரும்புகிறார் கல்குடாத்தொகுதி மக்களுக்கு தேசியப்பட்டியல் ஒன்று வழங்கி அப்பகுதி மக்களை கௌரவப்படுத்த வேண்டும் என்று.
எமது பிரதேச மக்களின் காணிப்பிரச்சினை மிக நீண்டநாளாக பேசப்பட்டு வருகின்ற விடயமே தவிர, அது தொடர்பான தீர்வுகள் கிடைத்தாக தெரியவில்லை இதனால் கட்சியின் தலைவரின் ஆலோசனையின் அடிப்படையில் இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் திரட்டப்பட்டு இது தொடர்பாக செயற்பட்டு வருவதுடன் சட்ட வல்லுனரின் ஆலோசனையையும் பெற்று வருகின்றோம். எமது மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பில் நிரந்தர தீர்வு எமது கட்சியால் நிச்சயம் பெற்றுத்தரப்படும்.
எமது பிரதேசத்தில் உள்ள எதிர்க்கட்சிக்காரர்களினால் சமகாலத்தில் அடிக்கடி பேசப்படும் பிரச்சினை குடிநீர் பிரச்சினையாகும். எமது பிரதேசத்தில் குடிநீர் பிரச்சினையை எமது கட்சியின் தேசியத்தலைவர் என்ன விலை கொடுத்தாவது பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அந்த குடி நீர் திட்டத்தை பிரதேசத்தில் அனைத்து இடங்களுக்கும் வழங்குவததற்கு அரசாங்கத்திடம் தற்போது பணம் இல்லை. அதனால் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனையின் அடிப்படையில்; அமைச்சர் என்ற வகையில் எமது தேசியத்தலைவர் ஜப்பான் மற்றும் சீனா போன்ற அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார் அதனடிப்படையில் இலகு கடன் அடிப்படையில் பணம் கிடைக்கவுள்ளது. பணம் கிடைத்ததும் அவ்வேலைகள் பூரணப்படுத்தப்படும். இத்திட்டம் தொடர்பாக நானும் தலைவரும் தொடர்ந்து பேசி வருகின்றோம்.
எமது பிரதேசத்தில் உள்ள இளைஞர், யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினையை தீர்ப்பதற்கு கற்ற சமூகத்தில் இருந்து ஒரு குழு அமைத்து அவர்களுக்கூடாக எமது பிரதேசத்தில் உள்ள தொழில் அற்ற இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வழங்குவது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம். இதன் அடிப்படையில் பிரதேசத்தில் தொழில் பேட்டைகளை அமைத்து அதிகமான தொழில்வாய்ப்புக்களை எமது பிரதேசத்தில் வழங்கி எமது பிரதேசத்தின் வறுமையை ஒழிப்பதற்கான திட்டத்தினை வகுத்து வருகின்றோம்' என்றார்.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025