2025 மே 12, திங்கட்கிழமை

'சர்வதேச கவன ஈர்ப்பாளர்கள் கிழக்கு மாகாணத்துக்கு வராமை கவலை அளிக்கிறது'

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

வடக்கு மாகாணத்துக்குச் செல்லும் சர்வதேசக் கவன ஈர்ப்பாளர்கள் கிழக்கு மாகாணத்துக்கு வருகை தராமலிருப்பது கவலை அளிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அவரது அலுவலகத்தில் புதன்கிழமை (10) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைக் கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன் வடக்குக்குச் சென்று பொதுமக்கள் உட்பட  பலரையும் சந்தித்தார். அவ்வாறே, அவர் திருகோணமலைக்கும் சென்றார். ஆனால், அவர் மட்டக்களப்புக்கு அழைத்து வரப்படவில்லை.

'வடக்கு மாகாணத்துக்குச் செல்லும் சர்வதேசக் கவன ஈர்ப்பாளர்களை கிழக்கு மாகாணத்துக்கும் அழைத்துவர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், மத்திய அரசாங்கமும் கிழக்கு மாகாண சபையும் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

'மேலும், 2016ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்திகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முறையாக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கையை கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சரவையிடம் முன்வைக்க விரும்புகின்றேன்.

கிழக்கு மாகாண சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு இவ்வருடம் ஒதுக்கப்பட்ட நிதி 1,278 மில்லியன் ரூபாயாகும். அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கிழக்கு மாகாணக் கல்வியமைச்சால் 65 கோடி ரூபாய் நிதி கல்வி அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து கல்வி வலயங்கள் இருக்கின்றன. கடந்த காலத்தில் மாணவர் தொகையை வைத்து வலயங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதேபோன்று, மாணவர் தொகைக்கேற்ப இந்த ஐந்து வலயங்களுக்கும் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X