Suganthini Ratnam / 2016 நவம்பர் 04 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
கிழக்கு மாகாணசபை கல்வி அமைச்சு குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட ஆளும் தரப்பு உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிடுமளவுக்கு அதன் செயற்பாடுகள் அமைந்துள்ளன. இதுவரை ஒரு சிற்றூழியரைக் கூட நியமிக்க முடியாதளவுக்கு மாகாணக் கல்வி அமைச்சு இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமனற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
இவ்வாறான விடயங்களை நான் கூட்டிக்காட்டினால் கிழக்கு மாகாணசபையைப் பிழை பிடிப்பதாகவும் விமர்சிப்பதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையிடம் எனக்கெதிராக முறைப்பாடு செய்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் 'வாகரைப் பிரதேசமானது முன்பு இருந்த நிலையிலிருந்து ஓரளவு முன்னேற்றமடைந்துள்ளது. ஆனால், ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்தவண்ணம் உள்ளது. மாகாண கல்வி அமைச்சினால் ஆசிரியர்கள நியமனம் தொடர்பான நிகழ்வு மட்டக்களப்பு மஹாஜன கல்லூரியில் நடைபெற்றது. இதில் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் அழைக்கப்படவில்லை. இந்த நிகழ்வு தொடர்பாக நாங்கள் ஆராயவுள்ளோம். கல்குடா கல்வி வலயத்தின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டிய பாரிய பொறுப்பு மாகாண கல்வி அமைச்சுக்கும் கல்விப் பணிப்பாளருக்கும் உள்ளது.
சில தமிழ்ப் பாடசாலைகளில் சகோதர இன ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு சில நாட்களில் தங்களது பகுதிகளுக்கு அனுப்புமாறு அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகள் கடிதங்கள் அனுப்புகின்றனர். இதன் தாக்கத்தை அதிகமாக கல்குடா வலயம் அனுபவித்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை தொடர்நதும் அனுமதிக்க முடியாது.
ஒருசில தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் உறவினர்களின் இடம்மாற்றம் செய்வதற்காக அரசியலைப் பயன்படுத்துகிறார்கள். எனது உறவினர்கள் அதிகஷ்ட பிரதேசங்களில் கடமையாற்றுகிறார்கள். நான் ஒருநாள் கூட இடம்மாற்றம் தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளரிடம் பேசியதில்லை.
வாகரை பிரதேசத்தில் மந்த போஷனையுள்ள மாணவர்கள் அதிகம் காணப்படுகிறார்கள். மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் தமது கல்வியை தொடருகின்றனர். இந்தப் பிரதேசத்தின் நான் கல்வி வளர்ச்சிக்கு என்னாலான சகல பங்களிப்புகளையும் செய்துவருகின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா மற்றும் மேற்கு வலயத்தில் அதிகம் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. ஆனால் மட்டக்களப்பு மற்றும் மத்தி ஆகிய வலயங்களில் மேலதிகமான ஆசிரியர்கள் உள்ளனர்.
மாகாணத்திலுள்ள வலயங்களில் சரியான முறையில் ஆசிரியர் பங்கீடு செய்யப்படவேண்டும். கிழக்கு மாகாணத்தில் தமிழினம் சார்ந்த பகுதிகளில் ஆசிரியர் நியமனத்தில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. இதை மாகாண கல்வி அமைச்சர் கவனத்தில் கொள்ளவேண்டும்.
கடந்த காலங்களில் எமது பாடசாலைகளில் எமது இனத்தைச் சாராதவர்கள் சிற்றூழியர்களாகவும் காவலாளிகளாவும் நியமிக்கப்பட்டார்கள். ஆனால், தற்போதுள்ள கல்வி அமைச்சர் எமது இனத்தைச் சேர்ந்த ஒரு சிற்றூழியர்களைக்கூட நியமிக்கவில்லை. அடுத்த வருடம் செப்டெம்பர் மாதத்துடன் கிழக்கு மாகாணசபை கலைந்துவிடப்போகிறது. இதையெல்லாம் நான் கேட்டால் கிழக்கு மாகாணசபை அமைச்சர்களை குறைகூறுவதாகவும் விமர்சிப்பதாகவும் எங்கள் கட்சித் தலைவரிடம் முறையிடுகிறார்கள்.
எங்களது கட்சியின் உறுப்பினர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சராக இருக்கிறார். மாகாண கல்வி அமைச்சின் இவ்வாண்டுக்கான நிதியில் 3400 மில்லியன் ரூபாய் திரும்பும் அபாயம் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரொருவர் கருத்து வெளியிட்டுள்ளார். மாகாண கல்வி அமைச்சு குறித்து ஆளும் தரப்பு உறுப்பினர்களே விமர்சிக்கும் அளவுக்கு செயற்பாடுகள் அமைந்துள்ளன. இது மிகவும் வேதனையான விடயம்.
வாகரைப் பிரதேசத்தில் காணிகளைக் குத்தகைக்கு எடுக்க வேண்டும் என்பதில் வெளியிடத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த பிரதேசத்தைச் சேர்ந்த மக்களால் ஏன் காணிகளைக் குத்தகைக்கு எடுத்து தொழில்களை மேற்கொள்ள முடியாதுள்ளது' என்றார்.
4 minute ago
20 minute ago
31 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
20 minute ago
31 minute ago
3 hours ago