2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

'சுவாமி விபுலானந்தரின் 125ஆவது பிறந்த தினம் மார்ச் 27ஆகும்'

Niroshini   / 2017 மார்ச் 29 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

“சுவாமி விபுலானந்தரின் 125ஆவது பிறந்த தினம் மார்ச் 27ஆகும். அவருடைய நினைவாக, இவ்வருடம் அவர் என்ன என்ன விடயங்களிலெல்லாம் செயற்பட்டாரோ அது சார்ந்து ஆற்றுகைகள், ஆய்வு மாநாடுகள், காட்சிப்படுத்தல்கள், கலந்துரையாடல்களைச் செய்யவிருக்கிறோம்” என, விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் தெரிவித்தார்.

திங்கட்கிழமை, கல்லடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் ஆரம்பமான உலக நாடக தினவிழாவில் தலைமையுரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

உலக நாடக தின விழாவும் சுவாமி விபுலானந்தரின் பிறந்த தினமும் ஒன்றாக இருப்பது சிறப்பம்சமாகும். அதனையொட்டியதாக இந்த விழாவானது வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலக நாடக தினம் மார்ச் 27ஆகும். சுவாமி விபுலானந்தரின் பிறந்ததினம் மார்ச் 27ஆகும். அதனைவிடவும் சிறப்பு என்பது அவருடைய 125ஆவது பிறந்த தினமாகும். இந்த வருடம் பூராகவும், சுவாமி விபுலானந்தர் நினைவாக, அவர் என்ன என்ன விடயங்களிலெல்லாம் செயற்பட்டாரோ அது சார்ந்து ஆற்றுகைகள், ஆய்வு மாநாடுகள், காட்சிப்படுத்தல்கள், கலந்துரையாடல்களைச் செய்யவிருக்கிறோம். அவருடைய ஆக்கங்கள், அவர் பற்றிய ஆக்கங்கள் எல்லாவற்றினையும் பல்கலைக்கழகத்தில் ஒரு தனிப்பிரிவாகவும் கொண்டுவருவதற்கான வேலைகளைத் தொடங்கியிருக்கிறோம்.

27 முதல் 29 வரையில் முழுக்க முழுக்க பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் 8 நாடகங்கள் அரங்கேறுகின்றன. அவற்றில் எமது நிறுவகத்தின் அனைத்து மாணவர்களும் இவற்றில் பங்கு பெறுகிறார்கள். இதில் முக்கியமாக போர்க்காலத்துக்கும் போருக்குப்பிந்திய காலத்துக்கம் ஈழத்தமிழர் அரங்கு தொடர்பான உரையாடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த வருடத்தில் 3 அரங்க ஆளுமைகளை நினைவுபடுத்தி இம்முறை அரங்குகளை வடிவமைத்திருக்கிறோம். முதல் நாள் எஸ்.பொ அரங்கு, 2ஆம் நாள் திரவியம் ராமச்சந்திரன் அரங்கு, 3 ஆம் நாள் அரசரெட்ணம் அண்ணாவியார் அரங்கு ஆகிய அரங்குகளை  கிழக்கினை அடியாகக் கொண்டு ஈழத்தமிழர் அரங்குக்கு பெரும் பங்காற்றியவர்கள் என்ற வகையில் அமைத்திருக்கிறோம்.

இந்த வருடத்துக்கான உலக நாடக தினச் செய்தியினை வழங்கியிருக்கிறார், பிரான்ஸ் நாட்டின் பிரபல நாடக நடிகை இசபெல் கியூபெட். அதேபோன்று எங்களுடைய நாடக தின சிறப்புச் செய்தியினை ஈழத்தமிழ் நவீன அரயிகில் 40 வருட காலங்களுக்கும் மேலாக தொடர்ந்தும் இயங்கிவரும் நாடக ஆளுமையான ஆனந்தராணி பாலேந்திரா வழங்கியிருந்தார்.

31 முதல் 2ஆம் திகதி வரையில் கொழும்பு சர்வதேச அரங்க விழாவினுடைய சமாந்தர அரங்க விழா நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளின் 3 நாடுகளின் நாடகங்கள் அரங்கேறுகின்றன. இந்த வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுடைய களப்பயிற்சிகள், கலந்துரையாடல்களும் பகல் நேரங்களில் நடைபெறவுள்ளன” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .