2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'தமிழரும் முஸ்லிமும் அணிதிரள்வது காலத்தின் தேவையாகும்'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பேரினவாதப் பிடியிலிருந்து தப்பவேண்டுமாயின், சிறுபான்மை இனங்களான தமிழரும் முஸ்லிமும் அணிதிரள்வது காலத்தின் தேவையாகும். அப்பொழுதே, அனைத்து விதமான அடக்குமுறைகளிலிருந்தும் விடுபட்டு அனைத்தையும் சாதிக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வந்தாறுமூலைப் பிரதேசத்திலுள்ள முன்பள்ளியில்; ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'தற்போது புதிய அரசியல் யாப்பை வரையும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. இதன் மூலமாக வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு சமஷ்டி முறை ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாக வலியுறுத்தப்படுகின்றது.  

அதேவேளை, இந்தக் கருத்துக்கு எதிராக பலவிதமான கோஷங்களும் அவ்வப்போது வெளிவருகின்றன. அவ்வாறு எதிர்ப்புகள்; கிளம்பினாலும், இந்த விடயத்தில் தமிழ் பேசுகின்ற சிறுபான்மை இனங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் அணி திரள்வார்களாக இருந்தால், பேரினவாதத்தின் தாக்கத்திலிருந்து தப்பிப் பிழைப்பதற்கு அதுவே ஒரே வழியாக இருக்கும்' என்றார்.

'இந்த இரு சமூகங்களும் சகோதர வாஞ்சையுடன் இணையவேண்டிய காலத்தின் தேவை உள்ளது. வடக்கு, கிழக்கின் பலம் பொருந்திய சக்திகளாக இந்த இரண்டு சமூகங்களும் தங்களது ஆற்றல், திறமைகளை வெளிப்படுத்த முடியும்.
அடக்குமுறை அரசியலால் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து தப்பிப்பதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்பதும் சமஷ்டி என்பதும் இன்றியமையாத தேவைப்பாடுகளாகும்.

மத்திய அரசில் குவிக்கப்பட்டிருக்கின்ற அரசியல் அதிகாரங்கள் ஏறத்தாழ 70 வருடங்களாக எங்களுக்கு எதனையும் தந்துவிடவில்லை. மாறாக, ஒற்றையாட்சி முறை எங்களுக்கு இன வன்முறைகளை உருவாக்கி அழிவுகளையும் அவ நம்பிக்கையையும் அவமானத்தையும் தந்துள்ளன.

மேலும், ஒற்றையாட்சிமுறை 30 வருடகால யுத்தத்தையும்; சிறை வாழ்க்கையையும் சீரழிவுகளையும் வாழ்க்கையோடு இருந்தவர்களை காணாமலும் ஆக்கியிருக்கின்றது.

ஆக, ஒற்றையாட்சியின் அரசியல் என்பது ஆக்கபூர்வமான அபிவிருத்திகளுக்குப் பதிலாக அழிவுகரமான பின்னடைவுகளையே தந்துள்ளன. எனவே, இதிலிருந்து சிறுபான்மை இனங்களை விடுவிடுவிக்கக்கூடிய விதத்தில் மத்தியில் இருக்கின்ற அதிகாரங்கள் மாகாண மட்டத்தில் பகிரப்பட்டு எங்களுடைய விருப்பு, வெறுப்புக்களை நாங்களே சீர்செய்யும் வகையில் அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டும்.

அவ்வாறான அதிகாரப்பகிர்வும் ஆட்சி முறையும் கிடைக்கும்போது, வேதனைகளையும் சோதனைகளையும் சுமந்துகொண்டு வாழ்கின்ற சிறுபான்மைச் சமூகங்கள் ஓரளவுக்காவது விமோசனம் பெறமுடியும்' எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X