Niroshini / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
தமிழ், முஸ்லிம்களுடைய வாக்குகள்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை தோற்கடித்து நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியுள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாழ்வாதார உபகரணங்களை வழங்கி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,
நல்லாட்சி அரசாங்கம் சிறுபான்மை சமூகங்களின் ஆதரவை பெற்றுள்ளதுடன் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வை முன்வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.
கடந்த அரசாங்கம் இவ்வாறு இருக்கவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நாயகம் இலங்கைக்கு வந்த போது, அவர்களை வரவேற்று அவர் பல பகுதிகளுக்கும் செல்வதற்கு சந்தர்ப்பத்தை இந்த அரசாங்கம் எற்படுத்திக் கொடுத்திருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 95 சதவீதமான மக்கள் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வரவேண்டுமென ஆதரவு வழங்கினார்கள்.
வடக்கு, கிழக்கு மற்றும் வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற சிறுபான்மை சமூகங்கள் ஒன்றுபட்டு நல்லாட்சியை தீர்மானித்தன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக் ஷவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்குமிடையில் காணப்பட்ட வாக்கு வித்தியாசம் என்பது ஐந்து இலட்சம் வாக்குகள்தான்.
இதில் தமிழ், முஸ்லிம் மக்களுடைய வாக்குகள் பதினைந்து இலட்சத்தையும் தாண்டியுள்ளன.
தமிழ், முஸ்லிம்களுடைய வாக்குகள் தான் இந்த நாட்டில் மஹிந்த ராஜபக் ஷவை தோற்கடித்து நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாவதற்கு தியாகம் செய்த ஒருவர் ரணில் விக்கிரமசிங்க.
35 இலட்சம் வாக்குகளை தனக்கென கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கு கொடுத்த ஆதரவுதான் இன்று நாட்டின் நல்லாட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்தற்கு காரணமாக ஐக்கியதேசியக் கட்சியும் அதன் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவும் இருந்தார்.
இந்த நல்லாட்சியில் வெளிப்படைத்தன்மையாக சகல நடவடிக்கைளும் கொண்டிருக்க வேண்டும். அந்த வெளிப்படைத்தன்மையினை நாங்களும் கொண்டிருக்கின்றோம் என்றார்.
இதன் போது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் மாகாண சபை நிதியொதுக்கீட்டின் மூலம் 25 இலட்சம் ரூபாய் நிதியில் 125 குடும்பங்களுக்கு தையல் இயந்திரம், சைக்கிள் உட்பட பல்வேறு வாழ்வதார உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி, மண்முனை வடக்கு வெல்லாவெளி போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள தமிழ், முஸ்லிம் குடும்பங்களுக்கே இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன.

8 hours ago
8 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
15 Dec 2025