2025 மே 10, சனிக்கிழமை

'தொழிற்பயிற்சி நிறுவனங்கள் பற்றி எச்சரிக்கை வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 13 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தேசிய தொழிற்பயிற்சி தகைமைச் சான்றிதழ்கள்; பெற்றுக்கொள்வதற்காக தொழில் பயில்வோர் தாம் பயிற்சி பெறும் நிறுவனங்கள் பற்றி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் மட்டக்களப்பு, வந்தாறுமூலை தேசிய தொழிற்பயிற்சி நிறுவன உதவிப் பணிப்பாளர் எம்.பி.நளீம், இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'தொழிற்பயிற்சியில் ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகள் முதலில் தேசிய தொழிற்பயிற்சி தகைமைச் சான்றிதழ்களை வழங்கும் நிறுவனங்கள் பற்றி அறிந்திருத்தல் அவசியம். இல்லையேல், மோசடியான நிறுவனங்கள் மூலம் பண விரயமும் காலவிரயமும் மன உளைச்சலும் ஏற்படும்' என்றார்.

'இலங்கை சட்டவாக்கத்தின்படி, தேசிய தொழில்நுட்ப தகைமைச் சான்றிதழ் வழங்குகின்ற நிறுவனங்களானது மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவின் கீழ் தொழிற்பயிற்சி நிலையங்களாகப் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். அத்துடன், அங்கு வழங்கப்படுகின்ற தொழில்நுட்பப் பயிற்சிகள் மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவினால் அங்கிகரிக்கப்பட்டதாகவும் இருக்கவேண்டும். அவ்வாறுள்ள நிறுவனங்களே தேசிய தொழிற்பயிற்சி தகைமைச் சான்றிதழ்களை வழங்கமுடியும்.

சில தொழிற்பயிற்சி நிலையங்கள் மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்திருந்தபோதிலும், அந்தப் பதிவு மூன்று வருடங்களில் காலாவதியான பின்னரும் கூட தொடர்ந்தும் தொழிற்பயிற்சிகளையும் சான்றிதழ்களையும் வழங்குகின்றன. எனவே, இத்தகைய மோசடிகளில் இளைஞர், யுவதிகள் சிக்கக்கூடாது.

திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபை மூலம் ஆற்றலை வளர்த்துக்கொள்ளக்கூடிய சுமார் 15 க்கும்  மேற்பட்ட பல்வேறு வகையான தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் செயற்படும் தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் இத்தகைய தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன' எனவும்  அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X